டாஸ்மாக் ஊழியர் அரசுக்கு எதிர்ப்பு

மேலுார் : மதுரை மாவட்டத்தில் அரசு மதுபான கடைகளில் பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொண்டு ரூ.10 வழங்கும் நடைமுறைக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலூரில் 23 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இக்கடை ஊழியர்கள் நேற்று ஒரு நாள் அடையாளமாக கடையடைப்பு செய்தனர். இப்பணிக்கு போதுமான ஊழியர் மற்றும் இட வசதி இல்லாததால் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊழியர்கள் கடையடைப்பு செய்தனர்.

உசிலம்பட்டி:

இப்புதிய நடைமுறைக்கு உசிலம்பட்டி பகுதி பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு தனி ஊழியர்கள் நியமிக்கக் கோரி நேற்று மதியம் 12:00 மணி முதல் 3:00 மணிவரை கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட கடைகள் 3 மணிநேரம் அடைக்கப்பட்டிருந்தன. டாஸ்மாக் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தைக்குப்பின் கடைகளை திறந்தனர்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட டாஸ்மாக் ஊழியர்கள் பலர் குறைதீர் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டர் பிரவீனிடம் மனு கொடுத்தனர்.

Advertisement