உத்திரமேரூரில் வைக்கோல் வாங்க ஆளின்றி விவசாயிகள் கவலை

சீட்டணஞ்சேரி: உத்திரமேரூரில், நெல் அறுவடை பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைக்கோல் வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், சீட்டணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, குருமஞ்சேரி, ஆத்தங்கரை, களியப்பேட்டை உள்ளிட்ட கிராமங்கள் பாலாற்றங்கரையொட்டி உள்ளன.
இப்பகுதிகளில் சொர்ணவாரி பட்டத்திற்கு நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளை துவக்கி உள்ளனர்.
அறுவடைக்கு பின் கால்நடைகளுக்கு தீவனமாக கிடைக்கும் வைக்கோலை விவசாயிகள் விற்று அதில் வருமானம் ஈட்டுவது வழக்கம்.
இந்த ஆண்டில், இப்பகுதிகளில் அதிக அளவிலான நிலங்களில் நெல் பயிரிட்டு ஆங்காங்கே அறுவடை பணி நடைபெறுகிறது.
இதனால், வைக்கோல் விலை கடும் வீழ்ச்சியடைந்து ஒரு உருளை கட்டு வைக்கோல் 50 ரூபாய்க்கு விலை போகிறது. ஆனால், அறுவடை செய்த நிலத்தில் உள்ள வைக்கோலை உருட்ட ஒரு உருட்டுக்கு இயந்திரக்கூலியாக 40 ரூபாய் பெறுகின்றனர்.
இதனால், வைக்கோல் விற்பனையில் விவசாயிகளுக்கு லாபம் இல்லை என்பதால் விற்பனை செய்யாமலே நிலத்திலேயே வைக்கோலை விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, சீட்டணஞ்சேரி கிராம விவசாயிகள் கூறியதாவது:
கடந்த நவரை பருவ நெல் அறுவடையின் போது ஒரு உருட்டு வைக்கோல் 200 ரூபாய் வரை விலை போனது.
ஆனால், சொர்ணவாரி பட்ட சாகுபடிக்கு இப்பகுதிகளில் அதிக நெல் பயிர் விளைச்சலால் வைக்கோல் மகசூல் அதிகரித்து ஒரு உருளை வைக்கோல் 50 ரூபாய்க்கும் குறைவாகி போனது.
வைக்கோல் மகசூல் அதிகரிப்பு ஒரு புறமிருக்க கடந்த ஒரு மாதமாக அடிக்கடி பெய்யும் மழையால் மேய்ச்சல் நிலங்களிலும் அதிகளவு தீவனப்புல் வளர்ந்து உள்ளது.
இதனால், கால்நடைகளுக்கு போதுமான இரை கிடைப்பதால் வைக்கோலை வாங்க கால்நடை பராமரிப்போர் ஆர்வம் காட்டுவதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
பால் கூட்டுறவு சங்க ஓய்வூதியதாரர்கள் கோரிக்கைகளை புறக்கணிக்கும் திமுக அரசு; அண்ணாமலை
-
புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாலே நிறுவனம் வந்துவிடாது: இபிஎஸ் சாடல்
-
இந்தியாவில் தயாரிக்கப்படும் சிப் உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும்: பிரதமர் மோடி திட்டவட்டம்
-
நடுவானில் இண்டிகோ விமானம் மீது மோதிய பறவை: நாக்பூரில் அவசர தரையிறக்கம்
-
தரங்கம்பாடியில் மீனவர்கள் போராட்டம்
-
மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்!