பூம்புகார் முதல் நாகை வரை கடலடி அகழாய்வு செய்ய முடிவு

சென்னை: சங்க கால சோழர்களின் தலைநகரும், துறைமுகமுமான பூம்புகார் முதல், பிற்கால சோழர்களின் துறைமுகமான நாகப்பட்டினம் வரை அகழாய்வு செய்ய, மத்திய அரசிடம் தமிழக தொல்லியல் துறை அனுமதி கோரி உள்ளது.

இந்த அனுமதி கிடைத்ததும், இந்திய கடலாய்வு பல்கலை மற்றும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியுடன், அடுத்த வாரத்தில் முதல்கட்ட ஆய்வுகளை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடலாய்வு மற்றும் கடலடி அகழாய்வு செய்ய, இந்த பருவ நிலைதான் உகந்தது. அதனால், இந்த மாதமே ஆய்வை துவக்க திட்டமிட்டுள்ளோம்.

முதலில், 'ரோபோ, ரிமோட்' வாயிலாக இயங்கும் தொழில்நுட்ப வாகனங்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக, கடலுக்குள் கட்டமைப்புகள் இருக்கும் இடங்களை கண்டறிந்து, அதன்பின் விரிவான ஆய்வை துவக்க உள்ளோம்.

சோழர்கள் கடல்வழி வணிகத்திலும், கடற்படையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். அவர்கள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி, சீனா, வளைகுடா நாடுகளிலும் வர்த்தக உறவுடனும், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளிலும் சிறந்திருந்தனர்.

அவர்களின் கடல் வழி மற்றும் துறைமுகங்கள், பூம்புகார் முதல் நாகப்பட்டினம் வரை விரிந்திருந்தன.

அதற்கான ஆதாரங்களாக, 1980களில் கடலாய்வு செய்தபோது, செங்கல் கட்டுமானங்கள், கலங்கரை விளக்கம், கப்பலின் பாகங்கள் உள்ளிட்டவை கிடைத்தன.

தற்போது, தொழில்நுட்ப வசதிகள் மேம்பட்டுள்ள நிலையில், மேலும் பல இடங்களை துல்லியமாக கண்டறிந்து அகழாய்வு செய்யும்போது, பல்வேறு தகவல்கள் கிடைக்கும்.

இதற்கான ஒப்புதல், ஏற்கனவே தமிழக அரசால் வழங்கப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement