5 மாவட்ட துார்வாரும் பணி ரூ.38 கோடியில் துவக்கம்

1

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில், 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரும் பணியை, நீர்வளத்துறை துவங்கி உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்கள், வடகிழக்கு பருவ மழையால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. பருவ மழையின்போது ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் புயல்கள், பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

எனவே, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்வழித் தடங்களை துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

கடந்த 2024ல், இப் பணிக்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது; இது போதவில்லை என புகார் எழுந்த நிலையில், நடப்பாண்டு இப்பணிக்கு, 38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்நிதியில், கிருஷ்ணா கால்வாய், கொசஸ்தலையாறு, ஆரணியாறு, பாலாறு, வெள்ளாறு, கொள்ளிடம், அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட முக்கிய நீர்வழித்தடங்களில், துார்வாருதல், அடைப்புகளை நீக்குதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மொத்தம், 195 இடங்களில் இப்பணிகளை நீர்வளத்துறை துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் முடியும் வரை, கடற்கரை முகத்துவாரங்களிலும், அடைப்பு ஏற்படும் இடங்களிலும் துார்வாரும் பணிகளை தொடரும் வகையில், ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அடுத்த மாதம் வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், பணிகள் தாமதமாக துவங்கியுள்ளதால், திட்டமிட்டபடி முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement