புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

சென்னை: பேரிடர் போன்ற பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், 44 புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை, மத்திய அரசின் கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சில் இறுதி செய்துள்ளது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற விலையில், எடை குறைந்த, பாதுகாப்பான வீடுகளை கட்டுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, மத்திய அரசின் கட்டுமான பொருட்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சில், பல்வேறு புதிய வழிகளை கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து, கட்டுமான அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:

மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் அடுத்த கட்டமாக, ஆறு நகரங்களில், 'லைட் ஹவுஸ்' என்ற பெயரில், மாற்று தொழில்நுட்பங்கள் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில், சென்னை பெரும்பாக்கம், குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி, மத்திய பிரதேசம் இந்துார், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ, திரிபுரா மாநிலம் அகர்தலா ஆகிய நகரங்களில், இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இத்திட்டங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் குறித்து, கட்டுமான பொருட்கள், தொழில்நுட்ப மேம்பாட்டு கவுன்சில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், '3டி பிரிகாஸ்ட் - 2; பிரிகாஸ்ட் கான்கிரீட் கட்டுமானம் - 9; குறைந்த எடை 'ஸ்டீல்' பொருட்கள் கட்டுமானம் - 7; 'பிரிபேப்ரிகேட்டட் சாண்ட்விட்ச்' பேனல் - 15; 'மோனோ லித்திக்' கட்டுமானம் - 2; நிலையான 'பிரேம் ஒர்க்' திட்டம் - 9' என, ஆறு பிரிவுகளில், 44 புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

பிரபல கட்டுமான நிறுவனங்களால், இதற்கான மாதிரிகளும் உருவாக்கப்பட்டு, இதன் வழிமுறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த விபரங்கள, பி.எம்.டி.பி.சி., இணையதளத்தில் விரைவில் மக்கள் பார்வைக்கு வெளியிடப்படும்.

இதனால், உள்ளூர் அளவில் செயல்படும் சிறிய கட்டுமான நிறுவனங்களும், இதுபோன்ற புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். அப்போது குறைந்த விலையில் பாதுகாப்பான வீடு மக்களுக்கு கிடைக்கும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement