தமிழகத்தில் ஆலை இல்லை நாகேந்திரனுக்கு புரிதல் இல்லை; அமைச்சர் ராஜா பதிலடி

1

சென்னை: 'ஜெர்மனியின், 'நார் பிரேம்ஸ்' நிறுவனத்துக்கு, தமிழகத்தில் உற்பத்தி சார்ந்த எந்த ஆலையும் கிடையாது. தற்போது, 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் அந்நிறுவனம் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு அரசு முறை பயணமாக, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு சென்றுள்ளது.

ஜெர்மனியில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் விமர்சனம் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, அமைச்சர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜெர்மனியில் முதல் நாளிலேயே, 3,201 கோடி ரூபாய்க்கான முதலீட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ள நிலையில், அதில் ஒரு நிறுவனமான, 'நார் பிரேம்ஸ்' சென்னையில் உள்ள நிறுவனம் என்றும், அதனுடன் ஜெர்மனிக்குச் சென்று ஒப்பந்தமா என்றும், நாகேந்திரன் கேட்டிருக்கிறார். தொழில் துறை சார்ந்த அவருடைய புரிதல் எவ்வளவு குழந்தைத்தனமாக உள்ளது என்பதையே, இது காட்டுகிறது.

'நார் பிரேம்ஸ்' நிறுவனத்துக்கு, தமிழகத்தில் உற்பத்தி சார்ந்த எந்த ஆலையும் கிடையாது. சென்னையில் சமீபத்தில் தி.மு.க., அரசின் முயற்சிகளால், அதன் முதல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகம் துவக்கப்பட்டது.

தற்போது, 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில், அந்நிறுவனம் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் இருந்து, 15 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தார் என்கிறார், நாகேந்திரன். தேவையில்லாமல் வாயை கொடுத்து, இவரும் மாட்டி கொள்கிறார்; அவரது தோழர்களையும் மாட்டி விடுகிறார்.

டாவோஸ் நகரிலிருந்து, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்திய தொழில் நிறுவனங்களுடன், மும்பையிலேயே உள்ள, 'ரிலையன்ஸ்' நிறுவனத்துடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக பேசி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த கதைகளை, நாகேந்திரன் அறிந்து கொள்வது நல்லது.

டாவோசில் அமர்ந்து, இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடறியும்.

தி.மு.க., தலைமையின் கீழ் இயங்கும் தமிழக அரசு, ஒருபோதும் இதுபோன்ற சில்லரை வேலைகளை செய்வதில்லை.

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளுடன், அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கும் மாநிலம் தமிழகம் என்பதையும், பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்தை அடைந்து சாதனை படைத்திருப்பதையும், மத்திய அரசே புள்ளிவிபர அறிக்கையுடன் சான்றிதழ் தந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், மூன்று நிறுவனங்களுடன், 3,201 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. இதில், 'நார்டெக்ஸ்' குழுமத்தின் காற்றாலை தயாரிப்பு நிறுவனம், சென்னைக்கு அருகே வெங்கல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. அதேபோல, 'இ.பி.எம்.பாப்ஸ்ட்' நிறுவனத்தின் உலக திறன் மையம், சென்னையில் செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு நினைத்திருந்தால், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தே, இந்த ஒப்பந்தங்களை செய்திருக்க முடியும். இதற்காக ஜெர்மனி போயிருக்க வேண்டியதில்லை.

ஜெர்மனி பயணத்தையும் சேர்த்து, இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு, 21,000 கோடி ரூபாய் தான்.

ஒட்டுமொத்தமாக கையெழுத்திடப்பட்டதாக கூறப்படும், 10.65 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே. இதற்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

அன்புமணி, தலைவர், பா.ம.க.,

Advertisement