அறிமுகமாகும் புது சானிடைசர்

கொரோனோ பரவிய காலங்களில் இருந்து நம்மிடையே சானிடைசர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது சந்தையில் விற்கப்படும் பெரும்பாலான சானிடைசர்கள் எத்தனால் கொண்டு தயாரிக்கப்படுபவை. இவை உடனடியாகக் கிருமிகளைக் கொல்லும். ஆனால் இவை நமது கைகளில் வெகுநேரம் தங்காது, ஆவியாகி விடும்.

அதிகபட்சமாக 1 மணி நேரம் மட்டும் இவற்றின் ஆற்றல் இருக்கும். 1 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிடைசர் பயன்படுத்துவது என்பது இயலாத காரியம். அதனால் தான் நீண்ட நேரம் நமது தோலில் தங்கியிருக்கும் சானிடைசர்களை உருவாக்க விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.

நமது உடலில் ஏற்படும் நோய்களுக்குக் காரணமான கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் கொண்டவை நைட்ரிக் ஆக்ஸைட் மூலக்கூறுகள்.

காயங்களுக்கான மருந்துகளில் இவை நீண்ட காலம் சேர்க்கப்பட்டு வருகின்றன. எனவே அமெரிக்காவில் உள்ள ஜியார்ஜியா பல்கலை இந்த மூலக்கூறுகளைக் கலந்து புதிய சானிடைசரை உருவாக்கி உள்ளது.

இதற்கு நைட்ரிக் ஆக்ஸைட் வெளியிடும் ஜெல் அதாவது NORel (Nitric Oxide Releasing gel) என்று பெயரிட்டுள்ளது. முயல் தோல் மீது சோதித்துப் பார்த்ததில் இந்த ஜெல் 97 சதவீத கிருமிகளை அழித்தது. இரண்டு மணி நேரம் வரை இது தோலில் தங்கி கிருமிகளைக் கொன்றது.

ஜெல் நமது தோலில் தங்கியிருக்கும் நேரத்தை இன்னும் அதிகமாக்க க்ளிசரின், எத்தனால் முதலியவற்றைக் கலந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement