வீட்டில் ஒளிரும் தாவரங்கள்

வீ ட்டிற்குள் அழகுக்காக வளர்க்கும் தாவரங்கள் இரவில் விதவிதமான நிறங்களில் ஒளிர்ந்தால் எப்படி இருக்கும்? வண்ணமயமாக இருக்கும் அல்லவா? இரவு விளக்குகளுக்கான மின்சாரத்தையும் சேமிக்கலாம். ஆனால் இது சாத்தியமா? சாத்தியப்படுத்தி உள்ளார்கள் சீனாவைச் சேர்ந்த சவுத் சைனா வேளாண் பல்கலை ஆய்வாளர்கள்.

தாவரங்களை ஒளிர வைக்கும் முயற்சி பல ஆண்டுகளாக நடந்து வருவது தான். 2017ம் ஆண்டு எம்.ஐ.டி., பல்கலை மின்மினிப்பூச்சிகளில் இருந்து சில நொதிகளைப் பிரித்து அவற் றைத் தாவரத்தில் சேர்த்து ஒளிர வைத்தனர். பிறகு இயற்கையாக ஒளிரும் காளான்களில் இருந்து மரபணுவை எடுத்து புகையிலைத் தாவரத்தில் செலுத்தி ஒளிரச் செய்தனர். ஆனால், இவை நீண்ட நேரம் ஒளிரவில்லை, அத்துடன் இவற்றைச் செய்ய அதிகப் பொருட்செலவு ஆனது.

தற்போது சீன ஆய்வாளர்கள் பாஸ்பர் நானோ துகள்களைப் பயன்படுத்தி தாவரங்களை நீலம், பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் ஒளிர வைத்துள்ள னர். இந்த துகள் பொதுவாகக் குழந்தைகளுக்கான ஒளிரும் பொம்மைகளில் சேர்க் கப்படும். பாஸ்பர் நானோ துகள்கள் விலை மலிவானவை, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவை.

வீட்டில் வளர்க்கும் தாவரங்கள் சிலவற்றை விஞ்ஞானிகள் தேர்ந்தெடுத்தனர். அவற்றில் எவ்வித மரபணு மாற்றமும் செய்யாமல், இந்தத் துகள்களை இலைகளுக்குள் நேரடியாக ஊசி வாயிலாகச் செலுத்தினர்.

பகலில் சூரிய வெளிச்சத்திலும், மாலையில் எல்.இ.டி., விளக்குகள் வெளிச்சத்திலும் ஒளியைப் பெற்றுக் கொண்ட இந்தத் துகள்கள், தாவரத்திற்குள் இருந்தபடி இரவில் இரண்டு மணி நேரம் ஒளிர்ந்தன. துகள்கள் செலுத்தப்பட்ட தாவரங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து 10 நாட்கள் கண்காணித்தனர். தாவரங்களில் பச்சையத்தின் அளவு குறையவில்லை, எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை.

நீண்டகாலம் இந்த துகள்கள் தாவரங்களுக்குள் இருந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில், தாவரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் ஆய்வு நிறைவடையும். வீடுகள், தெருக்கள், பாதைகள் எங்கும் தாவரங்கள் ஒளிரும்.

Advertisement