மேயர், கவுன்சிலர்களுக்கு அமைச்சர் தியாகராஜன் தடை; மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு எதிரொலியா?

2

மதுரை: மதுரையில் அமைச்சர் தியாகராஜன் அவரது தொகுதியில் நேற்று நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வட்டம், பகுதி செயலாளர்களை மட்டும் அனுமதித்தார். தன்னோடு மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் வர வேண்டாம் என தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் தியாகராஜன் 6 மாதங்களுக்கு ஒருமுறை தனது தொகுதி செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிட்டு வருகிறார். அறிக்கை வெளியிடுவதற்கு முன் மக்களை நேரில் சந்தித்து குறைகள் கேட்டு அதை நிறைவேற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன்படி நேற்று மத்திய தொகுதி 55 வது வார்டில் மேலமாசி வீதி, மக்கான் தெரு, மணிநகரம், தலைவிரிச்சான் சந்து உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று குறைகள் கேட்டார்.

சில தெருக்களில் வீடுகளில் கதவை தட்டி மக்களை வெளியே வரச்சொல்லி, உங்களுக்கு குறைகள் இருக்கிறதா எனக் கேட்டு விவரத்தை குறித்துக்கொண்டார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் சித்ரா, துணை கமிஷனர் ஜெய்னுலாவூதீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மாநகராட்சி கவுன்சிலர்களை, 'தொகுதிக்குள் என்னோடு நீங்கள் வரவேண்டாம்' எனக் கூறி அனுப்பி விட்டார். அது போல் அந்தந்த வட்டம், பகுதிச் செயலாளர்களை மட்டும் அழைத்துச் சென்றவர், கட்சியின் பிற நிர்வாகிகளையும் மக்கள் சந்திப்பின்போது அனுமதிக்கவில்லை. அமைச்சர் ஆதரவாளர்கள் கூறுகையில், மாநகராட்சியில் நடந்த சொத்துவரி முறைகேடு விவகாரத்தால் குறிப்பிட்ட கவுன்சிலர்கள், மேயர், கட்சியினர் உள்ளிட்டோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. மக்கள் சந்திப்பின் போது, அவர்கள் அமைச்சருடன் இருந்தால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற உத்தரவு பிறப்பித்திருக்கலாம் என்றனர்.

கவுன்சிலர்கள், கட்சியினர் கூறியதாவது: அமைச்சர் சிபாரிசு செய்தவர்கள் தான் பெரும்பாலும் சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். வார்டுகளில் பணியாற்றி மக்களிடம் பெயர் பெற்ற கவுன்சிலர்களும் பலர் உள்ளனர். ஆனால் ஒட்டு மொத்தமாக மக்கள் சந்திப்பின்போது கவுன்சிலர்கள் வரக்கூடாது என அமைச்சர் தெரிவித்தால் அவருக்கு தான் இழப்பு.

தேர்தலின்போதும் இதுபோல் வட்டம், பகுதி செயலாளரை மட்டும் அழைத்துக் கொண்டு பிரசாரத்திற்கு செல்வாரா என கொந்தளித்தனர்.

Advertisement