மதுரையில் 13 ஆசிரியருக்கு 'மாநில நல்லாசிரியர்' விருது நடைமுறையில் மாற்றம்
மதுரை : மதுரை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விருதுக்காக மாவட்டத்தில் 40 ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். நேர்காணல் நடத்தியபின், அவர்களின் விவரம் இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்டம் வாரியாக விருது பெற்ற ஆசிரியர்கள் விவரம் சி.இ.ஓ.,க்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் இந்தாண்டு சி.இ.ஓ.,க்களின் நேர்முக உதவியாளர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டு விருது பட்டியலை அவர்களிடம் கல்வித்துறை கொடுத்து அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்பட்டது.
தேர்வான ஆசிரியர்கள் விவரம் செல்வன் அற்புதராஜ், வி.எச்.என்., மேல்நிலைப் பள்ளி. ராஜேஷ்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர், ஓ.சி.பி.எம்., மேல்நிலைப் பள்ளி. ஜான்ஸிபாலின் மேரி, புனித சார்லஸ் மேல்நிலை பள்ளி, திருநகர். அழகேஸ்வரி, வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளி. கீதா கூடக்கோவில் நாடார் மேல்நிலைப் பள்ளி. சந்தானலட்சுமி, தலைமையாசிரியை மங்கையர்கரசி மேல்நிலைப் பள்ளி. மோசஸ் மங்களராஜ், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, ஒத்தக்கடை. முகமது பிரேம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குறிச்சிப்பட்டி. இளங்குமரன், தலைமையாசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி. கவிதா ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, விரபாண்டி. ஜெயந்தி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, ஆலம்பட்டி, திருமங்கலம். ஷீலா தேவி, தலைமையாசிரியை, ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, பூலாங்குளம். ஜெயலட்சுமி, லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வீரபாஞ்சான்.
தேர்வில் சர்ச்சை விருது பட்டியலில், அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் ஒருவருக்கு கூட விருது கிடைக்கவில்லை. உயர், மேல்நிலை பிரிவில் உதவிபெறும் பள்ளிகளுக்கு 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தொடக்க கல்வியில் உதவிபெறும் பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநில நல்லாசிரியர் விருது என்பது ஆசிரியர்களுக்கு பணியின்போது கிடைக்கும் ஒரு கவுரவம். அதை கொண்டாட வேண்டும். ஆனால் மதுரையில் விருது பெற்றோர் பெயர் விவரத்தை அதிகாரிகள் வெளியிடாமல் ரகசியம் காத்தனர். இதை கல்வித்துறை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.