விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படும் தி.மு.க., அரசு
மேலூர் : ''தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு விரோதமாக தி.மு.க., அரசு செயல்படுகிறது,'' என மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அவர் பேசியதாவது: மேலூர் அ.தி.மு.க.,வின் கோட்டை. 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க மாட்டோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு நாளிதழ் வாயிலாக தெரிவித்து விட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப்பகுதியில் டங்ஸ்டன் திட்டத்திற்கு தி.மு.க., அனுமதி அளித்த நிலையில் மக்களுடன் இணைந்து அ.தி.மு.க., சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்து தொடர்ந்து போராட்டம் நடத்தியும் அழுத்தம் கொடுத்ததால் மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்தது. விவசாயிகள் பாதிக்கப்படும் எந்த திட்டம் வந்தாலும் அ.தி.மு.க., அரசு முதல் ஆளாக குரல் கொடுக்கும். ஆனால் விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுவதாக தி.மு.க., அரசு உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று தந்தார். அந்த உத்தரவை நிறைவேற்ற இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்ப்பதால் தி.மு.க., அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வைகை அணையை தூர்வாரி நீர் தேக்க ஏற்பாடு செய்யப்படும். மக்களுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பம் எப்போதும் நன்மை செய்தது கிடையாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியுடன் பாதிக்கப்பட்டு உள்ளது. பாட்டி முதல் பேத்தி வரை யாருக்கும் பாதுகாப்பு கிடையாது. அம்மா மினி கிளினிக், மடிக்கணினி, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல திட்டங்களை தி.மு.க., அரசு ரத்து செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதக்கின்றன. மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர், குப்பை வரி அதிகரிப்பு தான் தி.மு.க., அரசின் சாதனை. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரு முறை ரூ.12 ஆயிரம் கோடி வரை பயிர் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். இவ்வாறு பேசினார்.