விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து குரல் கொடுப்போம்: பழனிசாமி

2

மேலுார் : ''தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகளுக்கு விரோதமாக தி.மு.க., அரசு செயல்படுகிறது,'' என மதுரை மாவட்டம் மேலுாரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

அவர் பேசியதாவது:

மக்களை பாதிக்கும் திட்டம் என அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தடை ஏற்படுத்தப்பட்ட திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தி வருகிறது.

இதற்காகத்தான், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம்.

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைக்க மாட்டோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு, நாளிதழ் வாயிலாக தெரிவித்தார். ஆனால், பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இப்பகுதியில் டங்ஸ்டன் திட்டத்திற்கு தி.மு.க., அனுமதி அளித்த நிலையில், மக்களுடன் இணைந்து அ.தி.மு.க., சார்பில் எதிர்ப்பு தெரிவித்தோம். சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்து, தொடர்ந்து போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுத்ததால், மத்திய அரசு இத்திட்டத்தை ரத்து செய்தது.

விவசாயிகள் பாதிக்கப்படும் எந்த திட்டம் வந்தாலும் அ.தி.மு.க., அரசு முதல் ஆளாக குரல் கொடுக்கும். ஆனால், தி.மு.க., அப்படியில்லை.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்று தந்தார்.

அந்த உத்தரவை நிறைவேற்ற கேரளாவில் இருக்கும் 'இண்டி'கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்க்கின்றன. அதை தி.மு.க., தரப்புதான், பேச்சு நடத்தி, அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement