அ.தி.மு.க.வுடன் அனுசரணையாக செல்லுங்கள் தமிழக பா.ஜ. தலைவர்களுக்கு மேலிடம் அறிவுரை
''தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை, அ.தி.மு.க.,வுடன் அனுசரணையுடன் நடந்து கொள்ள வேண்டும். நெருடல்கள் ஏதும் வரக்கூடாது,'' என, கட்சியின் டில்லி மேலிடம் தமிழக பா.ஜ., தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜ., தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. வரிசையாக செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் என, பல்வேறு திட்டங்களையும் வைத்திருக்கிறது.
அதன் ஒரு கட்டமாக, தமிழக பா.ஜ., தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்தில் நடந்த கூட்டத்தில் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் முருகன், மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா, தமிழக பா.ஜ, எம்.எல்.ஏ.,வான வானதி சீனிவாசன், கட்சியின் தமிழக அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்சி மேலிடத் தரப்பில் பா.ஜ.,தேசிய தலைவர் நட்டா மற்றும் மேலிட பொறுப்பாளர் சந்தோஷ், தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோரும் பங்கேற்ற அந்த கூட்டத்தின் துவக்கத்தில், தமிழக தலைவர்கள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு கருத்துக்களை, டில்லி தலை வர்கள் கேட்டறிந்தனர்.
குறிப்பாக, அ.தி.மு.க.,விடம் வைக்க வேண்டிய கோரிக்கை, எத்தனை சீட்கள் கோரிப் பெறுவது, பா.ஜ., போட்டியிட்டால் வெற்றியடைய வாய்ப்புள்ள தொகுதிகள் எவை எவை என்பது குறித்தெல்லாம் கேட்டுள்ளனர். பின், தமிழக பா.ஜ.,வில் நிலவும் கோஷ்டி பூசல்கள் குறித்து, சந்தோஷ் வெளிப்படையாகவே தலைவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்தே, அனைத்து தலைவர்களும், டில்லி தலைவர்களிடம் கருத்துக் களை கொட்டி உள்ளனர் .
அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்ட டில்லி தலைவர்கள், 'அது குறித்து அண்ணாமலையிடம் பேசுவோம்; விரைவில், அதெல்லாம் சரி செய்யப்படும்' என கூறியுள்ள னர். பின், டில்லி தலைவர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கி, அதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
அறிவுறுத்தல்கள் குறித்து தலைவர்கள் கூறியதாவது:
அ.தி.மு.க.,வுக்கென தனித்த கொள்கைகள் உள்ளன. அதனால், அக்கட்சி கொள்கை குறித்து, பா.ஜ.,வினர் விமர்சிக்கக் கூடாது. அ.தி.மு.க., உட்கட்சி விவகாரங்களில் தலையிடக்கூடாது. இரு கட்சி தொண்டர்களையும் உணர்வு ரீதியில் ஒன்றுபடுத்த வேண்டும். அ.தி.மு.க.,வினரோடு, எப்போதும் அனுசரணையாகவே நடந்து கொள்ள வேண்டும்.
தமிழக தே.ஜ., கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வரவுள்ளன. தி.மு.க.,வின் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முறைகேடு நடந்திருக்கிறதா என பார்க்க வேண்டும். அப்படி நடந்திருந்தால், அதை அம்பலப்படுத்த வேண்டும். மத்திய அரசு திட்டங்களை, தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரசாரமாக வைக்க வேண்டும்.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டதாக தலைவர்கள் கூறினர்.

மேலும்
-
பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்: ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு இபிஎஸ் வரவேற்பு
-
சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்; சென்னை ஐஐடி முதலிடம்
-
வரி ஏய்ப்பு புகார்: சென்னையில் 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை
-
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
அரசு பஸ் - ஜீப் நேருக்கு நேர் மோதி விபத்து; இரு குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
-
எங்கள் மீதான கரிசனத்திற்கு நன்றி: இபிஎஸ்க்கு சொல்கிறார் திருமா!