உயிர்களை காவு வாங்கும் குவாரி குட்டைகள் கண்டும் காணாமலும் அதிகாரிகள்

க ட லுார் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் ஏராளமான புஞ்சை நிலங்கள் உள்ளன. குறிப்பாக சிதம்பரம் அடுத்த சிலம்பிமங்கலம், அத்தியாநல்லுார், கொத்தட்டை, சின்னக்குமட்டி, வல்லம், சின்னாண்டிக்குழி உள்ளிட்ட பகுதிகளில், சில ஆண்டுகளாக அரசு அனுமதி பெற்று, சவுடு மண் குவாரிகள் செய ல்பட்டு வருகிறது.

குவாரிக்கு அனுமதி பெற்றவர்கள், அரசு அனுமதி அளித்த அளவை விட, அதிக ஆழத்திற்கு மண் எடுத்து வருகின்றனர். குவாரி செயல்படும் இடங்களில், 6 அல்லது 7 அடி தோண்டினாலே தண்ணீர் ஊற்று ஏற்படும்.

அப்போதும் விடாமல், மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றி, அதன் பிறகு மண்ணைத் தோண்டி விற்கும் அவலம் உள்ளது. இதனால் எவ்வளவு ஆழத்திற்கு மணல் எடுக்கப்படுகிறது என தெரியாத நிலை ஏற்படுகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்தும் சவுடு மணல் குவாரி உரிமையாளர்கள், 25 முதல் 30 அடி ஆழத்திற்கு மண் எடுக்கின்றனர்.

இதனால் மண் எடுத்த இடங்களில், மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி ஏரி போல் காணப்படுகிறது. இது போன்று மண் குவாரி செயல்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதை உணராத சிறுவர்கள், இளைஞர்கள் அந்த குட்டையில் குளிக்கின்றனர்.

அவ்வாறு குளிக்கம் போது ஆழத்தில் சிக்கி இறக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட 2பள்ளி மாணவர்கள் இறந்தனர்.

அனுமதி முடிந்து இயங்காத குவாரிகளைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்காத காரணத்தால், மண் குவாரி குட்டைகள் காவு வாங்கும் குட்டைகளாக மாறி, உயிர்களை பலி வாங்கி வருகிறது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, அனுமதி முடிந்து இயங்காத குவாரிகளில், தடுப்பு வேலி அமைக்கவும், அனுமதி பெற்ற குவாரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்து உயிர்பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement