ஆக்கிரமிப்பு வேலியை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள் திருவாலவாய நல்லுாரில் தர்ணா போராட்டம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லுார் சித்திபாபு ஜும்மா பள்ளிவாசல் சார்பில் அரசு நிலத்தில் அமைத்திருந்த வேலியை வருவாய்த் துறையினர் அகற்றினர்.

இங்கு பள்ளிவாசலும், அருகே சுந்தரவல்லி அம்மன் கோயிலும் உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் 2008 ல் மாவட்ட நிர்வாகத்திடம் வேலி அமைக்க அனுமதி பெற்றனர். இதை எதிர்த்து மற்றொரு தரப்பினரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நடந்து வருகிறது. இதனால் வேலி அமைக்க தடை ஏற்பட்டது.

சில மாதங்களுக்கு முன் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பள்ளிவாசலை சுற்றிலும் கற்களை ஊன்றி இரும்பு வலையால் வேலி அமைத்தனர். இதுபற்றி அறிந்த கலெக்டர் வேலியை அகற்ற உத்தரவிட்டார். தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் துணைத் தாசில்தார் செந்தில்குமார், வி.ஏ.ஓ., காளீஸ்வரி உள்பட அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்து வேலியை அகற்றினார்.

சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வேலியை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். போலீசாருக்கும், ஜமாத்தாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து முன்னறிவிப்பின்றி வேலியை அகற்றியதாகக் கூறி, பெண்கள் உட்பட பலர் திருவாலவாய நல்லுார் நான்கு வழி சாலை சர்வீஸ் ரோட்டில் அமர்ந்து தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம்செய்ததையடுத்து கலைந்தனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், எஸ்.ஐ. முருகேசன் உட்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement