விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து டாக்டர் பணியிடம் காலி அதிகாரிகள் கவனிப்பார்களா?

வி ருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி ஆயிரக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மகப்பேறு, முடநீக்கியல், பச்சிளம் குழந்தை பராமரிப்பு, ஆண்கள், பெண்கள் பொது என தினசரி 300க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

இட நெருக்கடியால் நோயாளிகள், மருத்துவ ஊழியர்கள் மிகவும் சிரமமடைந்து வருவதை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியானது.

இதையடுத்து, விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 5.45 கோடி ரூபாய் மதிப்பில் லிப்ட் வசதியுடன் ஐந்து அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இங்கு முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவனைகளுக்கு நிகராக தண்டுவடம், மூட்டுமாற்று உட்பட பல்வேறு பிரிவுகளில் அறுவை சிகிச்சைகள் செய்ய ப்படுகிறது.

ஆனால், அறுவை சிகிச்சைக்கு பிரதானமான மயக்க மருந்து டாக்டர் இல்லாததுபெரும் அதிருப்தியை தருகிறது. இதனால் திட்டக்குடி அரசு மருத்துவமனை அல்லது மாற்று மருத்துவமனைகளில் இருந்தும், தனியாரிடம் இருந்து மயக்க மருந்து டாக்டர் வரவழைக்கப்படும் அவலம் தொடர்கிறது. இது மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை.

விருத்தாசலம், நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், மங்கலம்பேட்டை, வேப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள், நோயாளிகள் இந்த மருத்துவமனையை நம்பியே உள்ளனர். எனவே, விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனைக்கு நிரந்தரமாக மயக்க மருந்து டாக்டரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement