மீட்பு ஒத்திகையில் தீயணைப்பு வீரர்கள்

பரமக்குடி: வடகிழக்கு பருவ மழையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் போலி ஒத்திகை பயிற்சியை பரமக்குடி தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை அக்., முதல் டிச., வரை பெய்யும். அப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கனமழை, புயல், வெள்ளம் உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் கடற்கரையோர பகுதிகள் மற்றும் அதனை சார்ந்த இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் பரமக்குடியில் வைகை ஆறு மற்றும் ஏராளமான கண்மாய், நீர் நிலைகள் உள்ளன.

அப்போது பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம் ஏற்படும் நிலையில், அவர்களை காப்பாற்றும் வகையில் பரமக்குடி தீயணைப்பு வீரர்கள் போலி ஒத்திகை பயிற்சி யில் ஈடுபட்டனர். எமனேஸ்வரம் உய்ய வந்த அம்மன் கோயில் ஊருணியில் நடந்த ஒத்திகையில் நிலைய அலுவலர் குணசேகரன், சிறப்பு நிலைய அலுவலர் அப்பாதுரை மற்றும் மீட்பு வீரர்கள், மக்களுடன் பயிற்சியில் ஈடுபட்டனர். இப்பயிற்சி பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டும் வகையில் இருந்தது.

மேலும் பேரிடர் உட்பட அனைத்து நாட்களிலும் 101, 112 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு மீட்பு பணிக்கு அழைக்கலாம் என தெரிவித்தனர்.

Advertisement