பாடலாசிரியர் கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்

3

சென்னை: "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், ஏடு தந்தானடி தில்லையிலே..." என பக்தி மனம் கமழும் அற்புத பாடல்களை தந்த பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன், இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

சிவகங்கை மாவட்டம், கீழப்பூங்குடி கிராமத்தை சேர்ந்த இவரின் நிஜப்பெயர் முருகவேல் காந்தி. சேரன் செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தனது பெயரை செங்குட்டுவன் என மாற்றிக் கொண்டார். ஊர் பெயரையும் முன்னால் இணைத்து... பூவை செங்குட்டுவன் என்ற பெயர் கொண்டார்.

1967 முதல் பாடல்கள் எழுதி வந்தார். அதில் பெரும்பாலானவை பக்தி பாடல்கள். ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்கள், 4000க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள், 2 படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.


சென்னை, பெரம்பூர், ரமணா நகரில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு பூவை தயா, ரவிச்சந்திரன் என்ற இரு மகன்களும், கலை செல்வி, விஜய லக்ஷிமி என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


அவர் எழுதிய பாடல்கள்


தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)

ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)

இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா)

நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி )

ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா) - அனைத்துப் பாடல்கள்

காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)

காலம் எனக்கொரு (பௌர்ணமி),

வானம் நமது தந்தை (தாகம்)

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)

ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை)

திருப்புகழைப் பாட பாட (கௌரி கல்யாணம்)

வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)

வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)

திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி)


அவர் பெற்ற விருதுகள்


கலைமாமணி விருது

கண்ணதாசன் விருது

2010- கவிஞர்கள் திருநாள் விருது

2021- மகாகவி பாரதியார் விருது

Advertisement