வரிகுறைப்பை வரவேற்கிறோம்; ஆனால்... ஜிஎஸ்டி குறைப்பு குறித்து ப.சிதம்பரம் கருத்து

72


புதுடில்லி: 'சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது' என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சாமானிய மக்களின் அன்றாட பயன்பாட்டு பொருட்களின் விலைக்கான வரி விகிதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உப்பு முதல் கார் வரை பெரும்பாலான பொருட்களின் விலை குறையவுள்ளது.

அதேபோல, விவசாயிகளும், விவாசயத் துறையும் பயன்பெறுவர். நாட்டின் பொருளாதாரத்தில் சுகாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக, காப்பீடு மற்றும் உயிர் காக்கும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால், இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்றும் விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்; சரக்கு மற்றும் சேவைகளின் வரி விகிதங்களைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் 8 ஆண்டுகள் மிகவும் தாமதமாகிவிட்டது. தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நிலவும் விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது.
கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் கேட்கப்படவில்லை.

இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது என்பதை யூகிப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மந்தமான வளர்ச்சியா? அதிகரிக்கும் குடும்பக் கடனா? குறையும் குடும்ப சேமிப்புகளா? பீஹார் தேர்தலா? டிரம்ப் மற்றும் அவரது வரி விதிப்புகளா? மேலே குறிப்பிடப்பட்ட அனைத்துமா?, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement