நிற்காமல் சென்ற காரில் சிக்கிய கொலை குற்றவாளிகள் போலீசார் தீவிர விசாரணை

சென்னை: இ.சி.ஆரில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற காரை, போலீசார் மடக்கிப்பிடித்தனர். காரில் இருந்தவர்கள், வெளி மாவட்டத்தை சேர்ந்த கொலை குற்றவாளிகள் என தெரியவந்ததையடுத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

நீலாங்கரை போலீசார், நேற்று முன்தினம் இரவு, இ.சி.ஆரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கோவளத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்ற ஒரு கார், போலீசாரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றது.

அடுத்த சந்திப்பில் நின்ற ரோந்து போலீசாரிடம் கூறி, அந்த காரை மடக்கினர். காரை சோதனை செய்தபோது, அதில் கத்தி, அரிவாள் இருந்தது. காரில் இருந்த ஐந்து பேரையும், காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

விசாரணையில், காரில் வந்தவர்கள், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விக்கி, 28, மதுரையை சேர்ந்த சூர்யா, 25, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஆரிப், 20, சிவகங்கையை சேர்ந்த அருண், 30, குமார், 28, என தெரிந்தது.

இவர்களில், குமாரை தவிர இதர நபர்கள் மீது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள், சென்னைக்கு எதற்கு வந்தனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Advertisement