விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டம் முதற்கட்டமாக தமிழக அரசு ரூ.1,964 கோடி ஒதுக்கீடு

சென்னை: விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு, 1,964 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கத்தில், விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில், 15.5 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

பாலம் வடிவமைப்பு மற்றும் நிலம் ஒதுக்குவதில் இருந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, சிறு திருத்தத்துடன் புதிய திட்ட அறிக்கை, கடந்த மே மாதம் அனுப்பப்பட்டது.

மத்திய அரசு கோரியதன் அடிப்படையில், விரிவான திட்ட அறிக்கையுடன், ஐந்து ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்தையும் இணைத்து, மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.

விமான நிலையம், பல்லாவரம், தோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி நகர், திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கங்கரணை, பெருங்களத்துார், வண்டலுார், அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 13 இடங்களில், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.

மெட்ரோ ரயில்பாதை, மேம்பால பாதை, மெட்ரோ ரயில் பணி மனை பணிகளை மேற்கொள்ள 9,445 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 1,964 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டு உள்ளது.

முதற்கட்ட பணிகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மட்டும் 1,816 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதர செலவுகளுக்கு மீதமுள்ள தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சாலைப் பணிகள், சர்வே எடுப்பு, புவியியல் தொழில்நுட்ப ஆய்வுகள், பேரி கார்டு அமைப்பது, மரங்களை அகற்றி வேறு இடங்களில் நடுவது, போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, சுற்றுச் சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளுக்கு, 112 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் இலக்கு இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறியதாவது:

சென்னையின் முக்கிய இணைப்பாக இருக்கும், விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து முனையம் இடையே, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற முயற்சித்து வருகிறோம்.

ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து 14 - 15 மீட்டர் உயரத்தில் நெடுஞ்சாலையின் மேம்பால சாலையும், 18 - 20 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால பாதையும் அமைக்கப்பட உள்ளது.

நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, 1,964 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதில், நிலம் அடையாளம் கண்டு கையகப்படுத்துவது, பைப் லைன், மின்இணைப்பு உள்ளிட்ட இதர பணிகள் மாற்றம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், மெட்ரோ திட்டப்பணிகளை துவக்க உள்ளோம். விமான நிலையம் - கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்துடன் மெட்ரோ ரயில் இணைப்பு பணிகளை, அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement