செங்கோட்டையனுக்கு மட்டுமல்ல பா.ஜ., தலைமைக்கும் பழனிசாமி 'செக்'

56

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பதவி பறிப்பு வாயிலாக, பா.ஜ., தலைமைக்கும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, 'செக்' வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதல்வரான பழனிசாமி, தினகரனை ஒதுக்கிவிட்டு, பன்னீர்செல்வம் ஆதரவுடன், நான்காண்டுகள் முதல்வராக இருந்தார்; இதற்கு பா.ஜ.,வும் உதவியது.


கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போதே, அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியில், தினகரனின் அ.ம.மு.க.,வுக்கு சில தொகுதிகளை ஒதுக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வற்புறுத்தினார். அதற்கு பழனிசாமி உடன்படவில்லை.




கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடனான கூட்டணியை, அ.தி.மு.க., முறித்துக்கொண்டது. அப்போது தினகரனும், பன்னீர்செல்வமும் பா.ஜ.,வுக்கு கை கொடுத்தனர். அவர்களின் ஆதரவோடு, தென் மாவட்டங்களில் பா.ஜ., கணிசமான ஓட்டுகளைப் பெற்றது.



பா.ஜ., முயற்சி இந்நிலையில், வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., மீண்டும் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டது.



வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும் என்பதில், பா.ஜ., உறுதியாக உள்ளது.



இதற்கு தினகரன், சசிகலா, பன்னீர்செல்வம் ஆகியோரை, அ.தி.மு.க.,வில் சேர்க்க வேண்டும் அல்லது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என, அ.தி.மு.க.,வை பா.ஜ., தலைமை வலியுறுத்தி வருகிறது.

ஆனால், அதை பழனிசாமி ஏற்க மறுத்து வருகிறார். இதனால், பன்னீர்செல்வமும், தினகரனும் பா.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதை தடுக்க, பா.ஜ., முயற்சித்து வருகிறது.




இந்நிலையில்தான், 'அ.தி.மு.க.,விலிருந்து வெளியே சென்றவர்களை இணைக்கும் பணிகளை, 10 நாட்களுக்குள் பழனிசாமி துவங்க வேண்டும்' எனக்கூறி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று முன்தினம் கெடு விதித்தார்.



'தன் குரலுக்கு, அ.தி.மு.க.,வில் பலர் ஆதரவு அளிப்பர், பழனிசாமிக்கு நெருக்கடி உருவாகும்' என, செங்கோட்டையன் எதிர்பார்த்தார். ஆனால், நடந்ததே வேறு.



திண்டுக்கல்லில், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு, செங்கோட்டையனை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.



திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் சிலர், 'கட்சி
உள் விவகாரங்களை பொதுவெளியில் பேச அனுமதித்தால், பலரும் அப்படி பேசுவர். கட்சிக்குள் கட்டுப்பாடு இருக்காது. எனவே, செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளனர்.



விஜயுடன் கூட்டணி அதைத்தொடர்ந்து, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்து, பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் வாயிலாக, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை, அ.தி.மு.க.,வில் சேர்ப்பதில்லை என்பதை, பழனிசாமி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதோடு, இந்த கருத்தை வலியுறுத்தும் பா.ஜ., தலைமைக்கும்,'செக்' வைத்துள்ளார்.



இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, 'செங்கோட்டையனின் பின்னணியில் பா.ஜ., இருக்கலாம் என்ற சந்தேகம், பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.



'இந்த விஷயத்தில், தொடர்ந்து பா.ஜ., நெருக்கடி கொடுத்தால், 'தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி' என்ற ஒப்பந்தத்துடன், விஜயுடன் கூட்டணி வைக்கவும் பழனிசாமி தயங்க மாட்டார்' என்றனர்.



அதேநேரம், 'சசிகலா, தினகரன், பன்னீர்செல்வத்தால், தென் மாவட்டங்களில் ஏற்கனவே செல்வாக்கை இழந்திருக்கும் அ,தி.மு.க.,வுக்கு, செங்கோட்டையனால் கொங்கு மண்டலத்திலும் இழப்பு ஏற்படும். இது, தி.மு.க.,வுக்கு சாதகமாகி விடும்' என்ற கருத்தையும், முன்னாள் அமைச்சர்கள் சிலர், பழனிசாமியிடம் கூறியுள்ளனர்.



அதற்கு, 'தி.மு.க.,வைக் காட்டி, கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதை ஏற்க முடியாது' என, பழனிசாமி கூறி விட்டதாகவும், அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

மொத்தத்தில் செங்கோட்டையன் மீதான நடவடிக்கை வாயிலாக, தன் உறுதியான நிலைப்பாட்டை, கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கும், கூட்டணி கட்சியான பா.ஜ., தலைமைக்கும் பழனிசாமி உணர்த்தியுள்ளதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

Advertisement