மேலப்பாளையத்தில் போலி பத்திரப்பதிவு சார் பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ரூ.கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய உதவியதாக மேலப்பாளையம் சார்பதிவாளராக இருந்த காட்டுராஜா உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த சரவணனுக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஆணையர்குளம் பகுதியில் 21 சென்ட் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடியாகும். கடந்த ஜூன் மாதம் அந்நிலத்தை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராஜவேல் போலி ஆவணங்கள் தயாரித்து மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது ஜவஹர் அலிக்கு விற்றதாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.

இதுகுறித்து சரவணன் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து ராஜவேல், முத்து ஜவஹர் அலி, உடந்தையாக இருந்த முத்துப்பாண்டி, ஆனந்தவேல் மற்றும் மேலப்பாளையம் சார்பதிவாளராக இருந்த காட்டுராஜா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில் முத்துப்பாண்டி, முத்து ஜவஹர் அலி கைது செய்யப்பட்டனர்.

சார்பதிவாளர் காட்டு ராஜா என்.ஜி.ஓ., காலனி பகுதியில் அரசின் பல்வேறு ஓ.எஸ்.ஆர்., நிலங்களை போலி முறையில் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் அவர் மேலப்பாளையத்திலிருந்து மாற்றப்பட்டு தற்போது ஆடிட் பிரிவில் சாதாரணப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement