பினாமிகளை விசாரித்ததில் வெளிவந்த முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை வளையத்தில் சசிகலா?

நாட்டில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது, 450 கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை ரொக்கமாகக் கொடுத்து, சர்க்கரை ஆலையை சசிகலா வாங்கியிருப்பது, சி.பி.ஐ., பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்திய அரசு, 2016 நவ., 8ல், பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.


சர்க்கரை ஆலை இவ்வாறு பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சில வாரங்களில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, 450 கோடி ரூபாய்க்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பத்மாதேவி சுகர்ஸ் என்ற சர்க்கரை ஆலையை வாங்கியுள்ளார்.




அதுவும், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரொக்கமாக கொடுத்து, சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.



குறிப்பிட்ட அந்த சர்க்கரை ஆலை நிறுவன இயக்குநர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 120 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்ததாக, சி.பி.ஐ.,யின் பெங்களூரு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.



சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த விசாரணையை சி.பி.ஐ., மேற்கொண்டு வருகிறது. கடந்த ஜூலையில் வழக்கு பதிந்த சி.பி.ஐ., சென்னை, திருச்சி, தென்காசி ஆகிய இடங்களில் ஆகஸ்டில் சோதனைகளை மேற்கொண்டது.



இதையடுத்தே, சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளது. அதில், பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


எப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ள விபரங்கள் வருமாறு:



கடந்த 2017 நவம்பரில் சசிகலா சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, சசிகலா உள்ளிட்டோரின் சொத்துக்களில் இருந்து சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.


ரூ.450 கோடி ரொக்கம் அப்போது, பத்மாதேவி சுகர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சர்க்கரை ஆலையை பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 450 கோடி ரூபாயை ரொக்கமாக கொடுத்து, சசிகலா வாங்கியிருப்பது தெரிய வந்தது.




அந்த ஆலையின் நிதி விவகாரங்களை கவனித்து வந்த ஹிதேஷ் ஷிவ்கன் படேல், ஆலையை விற்கும்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் அவரும், அவருடைய தந்தை ஷிவ்கன் படேல், சகோதரர் தினேஷ் படேல் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த விபரங்களை கண்டறிந்த வருமான வரித் துறையினர், சர்க்கரை ஆலையை முடக்கி உள்ளனர்.




அது பினாமி சொத்து என்றும், சசிகலா தான் ஆதாய உரிமையாளர் எனவும், வருமான வரித் துறை 2020ல் அறிவித்தது. வருமான வரித் துறை அறிவிப்பு அடிப்படையில், சசிகலாவிடம் அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.



தற்போது, வங்கி கடன் மோசடி விவகாரத்தில் பத்மாதேவி சுகர்ஸ் நிறுவனம், அதன் இயக்குநர்கள் ஹிதேஷ் ஷிவ்கன் படேல், தினேஷ் ஷிவ்கன் படேல், தம்புராஜ் ராஜேந்திரன், பாண்டியராஜ், வெங்கட பெருமாள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.



மோசடி கடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து மோசடியாக கடன் பெற்றது, சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியது, பணத்தை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றியது, தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டியில்லாத கடனாக பணத்தை வழங்கியது...



பண மதிப்பிழப்பு அமலில் இருக்கும் போது, சந்தேகத்துக்குரிய வழியில் வந்த பணத்தை, ரொக்கமாக வங்கிகளில் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வாறு எப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது.


பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, 450 கோடி ரூபாய்க்கு பழைய ரூபாய் நோட்டுகளை ரொக்கமாகக் கொடுத்து, சர்க்கரை ஆலையை சசிகலா முறைகேடாக வாங்கியதாக சி.பி.ஐ., தற்போது பதிவு செய்திருக்கும் வழக்கு, அரசியல் ரீதியாக சசிகலாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.




- நமது நிருபர் -

Advertisement