விநாயகர் ஊர்வலம் மீது கல்வீச்சை கண்டித்து... முழு அடைப்பு; மாண்டியா மத்துாரில் 500 பேர் மீது வழக்கு

மாண்டியாவின் மத்துார் டவுன் ராம் ரஹீம் சாலையில், கடந்த 7ம் தேதி இரவு விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்பகுதியில் உள்ள மசூதியில் இருந்து, ஊர்வலம் மீது கல்வீசப்பட்டது. அன்றைய தினமே கல்வீச்சில் ஈடுபட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கல்வீச்சை கண்டித்து நேற்று முன்தினம் மசூதி முன், ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். உருவ பொம்மையை சாலையில் போட்டு தீ வைத்தனர்.
மசூதி முன்பு சிறிய விநாயகர் சிலையை வைத்து போராட்டம் நடத்தியதுடன், டி.ஜே., பாடலை ஒலித்து, ஹிந்து அமைப்பினர் நடனம் ஆடினர். ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.
அரசு பஸ்கள் இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று மத்துார் டவுனில், முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன்படி நேற்று காலை, 6:00 மணிக்கு, முழு அடைப்பு போராட்டம் துவங்கியது. மத்துார் டவுனில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும், பால், காய்கறி கடைகள் மட்டும் சிறிது நேரம் திறந்திருந்தன. குறைந்த அளவில் அரசு பஸ்கள் இயங்கின. தனியார் பஸ்கள், ஆட்டோ, வாடகை கார்கள் இயக்கப்படவில்லை. 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால், ஹிந்து அமைப்பினர் சார்பில் பெரிய அளவில் போராட்டம், பேரணி நடக்கவில்லை.
அணிவகுப்பு பெங்களூரு - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, மத்துார் நகருக்குள் வரும் இணைப்பு சாலை, நகரில் உள்ள முக்கிய சாலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்கனவே, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், நேற்று கூடுதலாக, 1,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிரடி படையினரும் வந்தனர். நேற்று மாலை நகரில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மத்துாரில் இயல்பு நிலை மெதுவாக திரும்பி வரும் நிலையில், எந்த பிரச்னையும் ஏற்பட்டு விட கூடாது என்பதால் 144 தடை உத்தரவு, இன்று மாலை 6:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மது கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டது.
கல்வீச்சில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மசூதி வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதை பொறுத்து கொள்ள முடியாமல், கல்வீசியதாக ஒப்பு கொண்டு உள்ளனர். இதன் பின்னணியில் சென்னப்பட்டணாவின் இர்பான் என்பவர் இருப்பதும், அவர் தான் கல்வீச்சுக்கு மூளையாக செயல்பட்டதும் தெரிந்துள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
பா.ஜ., குழு இதற்கிடையில் மத்துாரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த, மைசூரு மண்டல ஐ.ஜி., போரலிங்கய்யா அளித்த பேட்டி:
மத்துாரில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விநாயகர் சிலை ஊர்வலம் மீது கல் வீசப்பட்டது உறுதியாகி உள்ளது. ஆனால், மசூதியில் இருந்து கல் வீசப்பட்டதற்கான, ஆதாரம் இதுவரை சிக்கவில்லை. மசூதி அருகில் உள்ள தெருவில் இருந்து கல்வீசப்பட்டது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கல்வீச்சில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். மொத்தம் 22 பேரை கைது செய்து உள்ளோம். மேலும் நான்கு பேரை தேடிவருகிறோம். கைதானவர்களுக்கு குற்ற பின்னணி உள்ளதா என்றும் விசாரிக்கிறோம். இன்று மத்துாரில் மீண்டும் விநாயகர் சிலைகளை கரைக்க, ஹிந்து அமைப்பினர் ஊர்வலமாக எடுத்து செல்ல உள்ளனர். பாதுகாப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், மசூதி முன்பு போராட்டம் நடத்தியதாக, ஹிந்து அமைப்பின் 500 பேர் மீது, மத்துார் போலீஸ் நிலையத்தில் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தவர்கள், அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. விஜயேந்திரா தலைமையிலான பா.ஜ., குழு, இன்று மத்துாருக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளனர்.
மேலும்
-
தமிழகம் பீஹார் அல்ல: சொல்கிறார் துரைமுருகன்
-
சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு
-
காலிறுதியில் லக்சயா, ஆயுஷ் *ஹாங்காங் பாட்மின்டனில்...
-
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
-
நிஜ ரமணாக்கள்
-
கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்