தங்கவயல் செக் போஸ்ட்

காக்கி ஆபீசர் கண்டிப்பு!

கோல்டு சிட்டி மாவட்ட பெரிய காக்கி ஆபீசர், பஸ் நிலையம் உட்பட நகர் வலம் சென்றாரு. பஸ் நிலையத்தில் மது கடைகளுக்கு தான் பெர்மிஷன். ஆனால் கடைக்குள்ளே குடிக்க அனுமதிக்கக் கூடாது' என்பதை எச்சரிச்சாரு.

பஸ் நிலையம் இருப்பதே, பஸ்களுக்காகவா அல்லது போதை பிரியர்களுக்காகவான்னு உறுதியா யாரும் சொல்ல முடியல. இப்படி பல வருஷமா இருந்து வருவதை இதற்கு முன்பு இருந்த காக்கி ஆபீசர்களோ, மக்கள் தலைவர்களுக்கோ தெரியாமலா போனது.

அவங்க எல்லாம் இதன் பேரில் கவனம் செலுத்தினதா தெரியலையே? அதில் என்ன உள் ஒப்பந்தமோ? பஸ் நிலைய கடைகளுக்குள்ளேயே குடிப்பது, குடிச்சவங்க பயணியருக்காக அமைத்திருக்கிற பெஞ்ச்களை ஆக்கிரமித்து, எச்சில் துப்புவது, வாந்தி எடுப்பது, அங்கேயே மட்டையாகி துாங்குவது எல்லாம் சகஜமான சமாசாரம்.

இதுக்கெல்லாம் ஆப்பு வைக்க காக்கி ஆபீசர் கவனம் செலுத்தி இருக்காரு. அவரே அடிக்கடி சர்ப்ரைஸ் விசிட் செய்தால் பஸ் நிலையம் சுத்தமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும்னு நகர் பேர்ல அக்கறை காட்டுறவங்க விரும்புறாங்க.



பூங்கா பெயரில் பணம் ஏப்பம்!

அரசு மருத்துவமனை வளாகத்தில் பூங்கா ஏற்படுத்தி இருக்காங்க. சின்னஞ் சிறுசுகள் விளையாட ஊஞ்சல், இன்னும் சில சாதனங்கள், இருக்கைகள் ஏற்படுத்தி இருக்காங்க. அதற்கு செலவிட்ட தொகை விபரத்தை பலகை வைத்து தெரிவித்திருக்காங்க.

என்னதான் அரசு பணமாக இருந்தாலும், 10 மடங்கு அதிகமாகவா பூங்கா பேர்ல பணத்தை தின்று ஏப்பமிடுவது? இதை ஜனங்க பார்த்து, இதுக்கா இவ்வளவு தொகை செலவானதென அங்கலாய்க்கிறாங்க. நேரம் வரும். மக்கள் சக்தியின் பலம் என்னவென காட்டாமல் விட மாட்டாங்க என்ற, 'எக்கோ வாய்ஸ்' பொன்னகரில் ஒலிக்காமல் இல்லை.



மக்கள் தரிசனம் ஆரம்பம்!

முனிசி., கவுன்சிலர் பதவிக்கு ஆசைப்படும் சமூக ஆர்வலர்கள் என, வார்டுக்கு நான்கு பேர் மக்களை தரிசிக்க வந்துட்டாங்க. வார்டுகளில் பதுங்கி இருந்தவங்க சதுர்த்தி விழாவுல வெளியே வந்து, தங்களின் தாராள பங்கை செலுத்தி அசத்திட்டாங்க. பதவியில் இருப்பவர்களை விட புதுசா ஆசைப்படும் கவுன்சிலர் பதவி விரும்பிகள், தமக்காக இப்பவே படை பட்டாளங்களை உருவாக்கி செல்வாக்குகளை காட்டினாங்க.

அக்டோபரில் பதவிக் காலம் முடிந்தாலும், தேர்தல் அறிவிப்பு வரணும்; அதற்கு முன்னதாக இட ஒதுக்கீடு தெரிவிக்க வேணும்; ஆளும் கட்சிக்கு சாதகமா வார்டு இட ஒதுக்கீடு தயாரிக்கணும்; எப்படியும் இன்னும் 6 மாதம் தேவைப்படுமென விபரம் அறிந்தவங்க கணிக்கிறாங்க. வாக்காளர் மனசில இடம் பிடிக்கும் வேலையாக எல்லா வார்டுகளிலும் ஆடுறாங்க.



எதிர்க்கட்சிகள் 'சைலன்ட்'

கோல்டு சிட்டியின் வரலாற்றில் தொழிற்சங்க ஆதிக்கமே அசெம்பிளிக்குள் கால்பதிக்க வைத்தது. இதை முறியடிக்க ஜாதி அரசியல் வேர்பிடித்தது. அதையும் தலையெடுக்க விடாமல் தடுத்தது, மொழி அரசியல். இம்மூன்றுக்கும் முடிவுரை எழுதியது, தேசிய அரசியல்.

தற்போது, புதுவித குரலாக, 'மண்ணின் மைந்தர்' பார்முலாவை வெளிபடுத்தினாங்க. இதிலும், கிராமத்துக்காரங்க சிட்டி ஆட்களை ஏற்க மறுக்குறாங்க. ஒருவேளை சிட்டிக்கு மட்டுமே ஒரு அசெம்பிளி தொகுதி அமைந்தால் மண்ணின் மைந்தர் பாலிசி ஒர்க் அவுட் ஆகலாமாம்.

அசெம்பிளி தேர்தலில் தொடர்ந்து ரெண்டு முறை தோற்றவர் மீண்டும் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை. ரெண்டு முறை தொடர்ந்து ஜெயித்தவர், மூன்றாவது ஹாட்ரிக் அடித்தததும் கிடையாது.

இதனாலே முனிசி., கிராம, தாலுகா, பஞ்., தேர்தலில் ஜெயிக்க வைத்து அசெம்பிளிக்கு எளிதாக நுழையும் வேலையை கைகாரங்க செய்து வராங்க. பூக்காரங்க, புல்லுக்கட்டுக்காரங்களோட வேகமோ, விவேகமோ, 'சைலன்ட் மோடில்' உள்ளது.

Advertisement