இந்திய அணி வெற்றி துவக்கம் * 57 ரன்னில் சுருண்டது எமிரேட்ஸ்

துபாய்: ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று தனது முதல் போட்டியில் 9 விக்கெட்டில் ஐக்கிய அரபு எமிரேட்சை வீழ்த்தியது. குல்தீப் 4, ஷிவம் துபே 3 விக்கெட் சாய்த்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்சில் ஆசிய கோப்பை 'டி--20' தொடர் நடக்கிறது. இந்தியா, இலங்கை உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் உலக சாம்பியன் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் துணை கேப்டன் சுப்மன் கில்லுடன், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் களமிறங்கிய 11 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றார்.
பும்ரா 'யார்க்கர்'
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு (எமிரேட்ஸ்) அலிஷன் ஷரபு, கேப்டன் முகமது வாசீம் ஜோடி துவக்கத்தில் சற்று நம்பிக்கை தந்தது. பாண்ட்யா வீசிய முதல் ஓவரில் 4, 5வது பந்துகளில் பவுண்டரி விளாசினார் ஷரபு. அடுத்து வந்த பும்ரா ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் பவுண்டரி அடித்தார் ஷரபு. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 3 ஓவரில் 25/0 ரன் எடுத்தது. பும்ரா நான்காவது ஓவரை வீசினார். 'யார்க்கராக' வந்த, நான்காவது பந்தில் ஷரபு (22) போல்டானார்.
குல்தீப் 'மூன்று'
இதன் பின் விக்கெட் சரிவு துவங்கியது. வருண் சக்ரவர்த்தி பந்தில் முகமது ஜோஹைப் (2), குல்தீப்பிடம் 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார். மீண்டும் வந்த பும்ரா ஓவரில், மூன்று பவுண்டரி அடித்தார் முகமது வாசீம். போட்டியின் 9வது ஓவரில் பந்தை சுழற்றினார் குல்தீப்.
முதல் பந்தில் ராகுல் சோப்ரா (3) சுப்மனிடம் 'பிடி' கொடுத்து திரும்பினார். 4வது பந்தில் முகமது வாசீம் (19) அவுட்டானார். கடைசி பந்தில் ஹர்ஷித் கவுஷிக் (2) போல்டானார். 9 ஓவரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50/5 ரன் என மீள முடியாமல் தத்தளித்தது.
அடுத்த சிறிது நேரத்தில் ஷிவம் துபே பந்தில் ஆசிப் கான் (2) அவுட்டாகி திரும்பினார். மறுபக்கம் அக்சர் படேல் சுழலில், இந்திய வம்சாவளி வீரர் சிம்ரன்ஜீத் சிங் (1) அவுட்டானார். போட்டியின் 13வது ஓவரை வீசினார் துபே. முதல் பந்தில் துருவ் பராஷர் (1) அவுட்டானார். 4வது பந்தில் ஜுனைடு சித்திக் 'டக்' அவுட்டானார். கடைசியில் ஹைதர் அலி (1) வீழ்ந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் சுருண்டது. இந்தியா சார்பில் குல்தீப் 4, துபே 3 விக்கெட் சாய்த்தனர்.
எளிய இலக்கு
எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. ஹைதர் அலி வீசிய முதல் இரு பந்தில் சிக்சர், பவுண்டரி என விளாசினார் அபிஷேக். பராஷர் வீசிய 3வது ஓவரின் கடைசி இரு பந்தில் 6, 4 என அடித்தார் அபிஷேக். இவர், 30 ரன்னில் அவுட்டானார்.
கடைசியில் சிம்ரன்ஜீத் பந்தில் சுப்மன் ஒரு பவுண்டரி அடிக்க, இந்திய அணி 4.3 ஓவரில் 60/1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சுப்மன் (20), சூர்யகுமார் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
அதிவேக 'சேஸ்'
'டி-20' அரங்கில் இந்திய அணி நேற்று அதிவேகமாக 'சேஸ்' செய்து வென்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (57/10) இலக்கை 4.3 ஓவரில் (60/1 ரன்) எடுத்தது. முன்னதாக 2021ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்தியா 6.3 ஓவரில் 'சேஸ்' செய்து வெற்றி பெற்று இருந்தது.
முதல் 'டாஸ்'
சர்வதேச அரங்கில் மூன்று வித கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ந்து 15 போட்டிகளில் 'டாஸ்' தோற்று இருந்தது. ஒருவழியாக நேற்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் 'டாஸ்' வென்றார்.
இரண்டாவது முறை
கடந்த 2016 ஆசிய கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை (81/9), இந்தியா (10.1 ஓவர், 82/1) 9 விக்கெட்டில் வென்றது. நேற்று இரு அணிகள் இரண்டாவது முறையாக மோதின. இதில் 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது.
10 ரன், 8 விக்கெட்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி ஒருகட்டத்தில் 47/2 என இருந்தது. அடுத்து 10 ரன் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழக்க, 57 ரன்னில் ஆல் அவுட்டானது.
குறைந்த ஸ்கோர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நேற்று 57 ரன்னில் சுருண்டது. 'டி-20' அரங்கில் இந்திய அணிக்கு எதிராக எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோர் இது ஆனது. முன்னதாக 2017ல் நியூசிலாந்து அணி 61/6 ரன் எடுத்திருந்தது.