மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில் இடம்பிடித்த கிரிப்டோ கரன்சி, துப்பாக்கிகள்

10

புதுடில்லி: கடந்த 2024 - 25ம் நிதியாண்டிற்கான மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில், கிரிப்டோகரன்சி முதலீடு, 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள், துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் 2024 - 25ம் நிதியாண்டிற்கான சொத்து விபரங்கள், பிரதமர் அலுவலக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம்:

மத்திய திறன் மேம்பாட்டு துறை இணையமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவருமான ஜெயந்த் சவுத்ரி, கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, 21.31 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோ முதலீடுகளை வைத்துள்ளார். அவர் மனைவி சாரு சிங், 22.41 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டிஜிட்டல் சொத்துகளை வைத்துள்ளார்.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், 37 ஆண்டுகள் பழமையான ஸ்கூட்டர் மற்றும் ஒரு ரிவால்வரை வைத்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், இரு சக்கர வாகனம் மற்றும் 19 லட்சத்துக்கும் அதிகமான 'மியூச்சுவல் பண்ட்' முதலீடுகளை வைத்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், 1.2 கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புள்ள 1,679 கிராம் தங்க நகைகள், 10 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சொந்தகாரராக உள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியின் சொத்துக்களில் 31 ஆண்டுகள் பழமையான ஒரு அம்பாசிடர் கார் உள்ளிட்ட மூன்று கார்கள் அடங்கும்.

அதுமட்டுமின்றி, 37 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளையும் அவர் அறிவித்துள்ளார். அவரது மனைவி காஞ்சன் நிதின் கட்கரி 28 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வைத்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, ஒரு ரிவால்வர், ஒரு ரைபிள், ஒரு டிராக்டர் மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகள் உட்பட கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அறிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூர், இரட்டைக் குழல் துப்பாக்கி, ஒரு ரிவால்வர் மற்றும் 67 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் இருப்பதாக அறிவித்துள்ளார்.

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், 74 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட சொத்துக்களை வைத்துள்ளார்.

ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, 1997ம் ஆண்டு மாடல் 'மாருதி எஸ்டீம்' கார் மற்றும் ஒரு கைத்துப்பாக்கியை வைத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement