வாலிபரை தற்கொலைக்கு துாண்டியதாக காவல் நிலையம் முற்றுகை; சாலை மறியல்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிடாகம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் மகன் சஞ்சய், 21; சி.சி.டி.வி., கேமரா பொருத்தும் வேலை செய்து வந்தார். இவர், தனது நண்பர்களுடன் கடந்த 7ம் தேதி இரவு விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த பொருட்காட்சியை காண சென்றார். அங்கு, விழுப்புரம் வழுதரெட்டி காலனியை சேர்ந்த வாலிபர் ஒருவர், காலி தண்ணீர் பாட்டிலை சஞ்சய் மீது துாக்கிப்போட்டுள்ளார்.

தட்டிக்கேட்ட சஞ்சயை, அப்பகுதி இளைஞர்கள் சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சஞ்சய் கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், தாக்கப்பட்டு மன உளைச்சலில் இருந்த சஞ்சய், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நேற்று காலை 11:30 மணியளவில் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சஞ்சய் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவர்த்தை நடத்தியும் உடன்படாத அவர்கள், பகல் 12:40 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிடாகம் குச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி., தினகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, மதியம் 1:00 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement