நேபாள குடும்பங்கள் கவலை: மாணவர்களின் தசரா பயணம் ரத்து

புதுடில்லி:நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையால், டில்லியில் படித்து வரும் அந்நாட்டு மாணவர்கள் பதற்றத்தில் உள்ளனர். தசரா பயணங்களை அவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

சமூக ஊடகங்கள் மீதான தடைக்கு எதிராக நம் அண்டை நாடான நேபாளத்தில் போராட்டங்கள் வெடித்தன. பெரும் பொருட் சேதத்தை விளைவித்து வருகிறது.

ராஜினாமா சமூக ஊடகங்கள் மீதான தடை திங்கள்கிழமை இரவு நீக்கப்பட்ட போதிலும், போராட்டங்கள் தொடர்ந்தன. பிரதமர் ஒலி ராஜினாமா செய்தார். வன்முறையில் 19 பேர் இறந்த ஒரு நாளுக்குப் பிறகு, பல அரசு கட்டடங்களைத் தாக்கி, பார்லிமென்டையும் பல உயர்மட்டத் தலைவர்களின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கினர்.

தங்கள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனவும், குடும்பங்களின் பாதுகாப்புக்காகவும் டில்லியில் உள்ள நேபாள நாட்டினர் பிரார்த்தனை செய்கின்றனர்.

கிர்கி எக்ஸ்டென்ஷனில் உள்ள நேபாள கானா உணவகத்தின் உரிமையாளர் உதிதா கானல் கூறுகையில், “என் அம்மா என்னுடன் இருக்கிறார். ஆனால் என் சகோதர சகோதரிகள் காத்மாண்டுவில் வசிக்கின்றனர். அது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்,” என்றார்.

“இணைய வசதி உள்ளிட்ட தொலைதொடர்பு பிரச்னை காரணமாக அவர்களை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அத்தியாவசிப் பொருட்கள் வாங்கக்கூட அவர்களால் வெளியே செல்ல முடியவில்லை. எங்கள் நாட்டில் அமைதி திரும்ப எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்,” என்றார் அவர்.

பதற்றம் இவர் உணவகத்தின் சில ஊழியர்களும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களே. ஆனால் அவர்களின் குடும்பங்கள், பாதிப்பு இல்லாத கிராமங்களில் இருப்பதால் நிம்மதியாக உள்ளனர்.

இவரைப் போல டில்லியில் 18 ஆண்டுகளாக வசித்து வரும் நேபாளத்தைச் சேர்ந்த தேப் சேத்ரி உள்ளிட்டோர், தங்கள் நாட்டின் நிலை குறித்து கவலை தெரிவித்தனர்.

டில்லியில் படிக்கும் நேபாள மாணவர்களும் பதற்றத்தில் வாழ்கின்றனர். தசராவுக்காக நேபாளம் செல்ல தயாராகி வந்த மாணவர்கள், தங்கள் திட்டத்தை ரத்து செய்துள்ளனர்.

டில்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ ராம் வணிகக் கல்லுாரியில் முதுகலை மாணவர் ஒருவர், “என் குடும்பத்தினருடன் தசரா கொண்டாட ஆவலுடன் இருந்தேன். ஆனால் அங்கு நிலைமை சீராகும் வரை டில்லியிலேயே இருக்குமாறு அவர்கள் எனக்கு அறிவுறுத்தியுள்ளனர்,” என்றார்.

இதே கருத்தை நேபாளத்தின் அனைத்து மாணவர்களும் எடுத்துள்ளனர். நிலை சீராகும் வரை நேபாளத்திற்கு பயணம் செய்வதை ஒத்திவைக்குமாறு, அவர்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisement