விதிமீறிய மீன் பிடிப்பால் அழியும் பவளப் பாறைகள்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் தடை செய்யப்பட்ட வலையில் மீன் பிடிப்பதால் பவளப்பாறைகள் சேதமடைந்து கரை ஒதுங்குவதால் எதிர் காலத்தின் ராமேஸ்வரம் தீவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளடக்கிய தீவுப் பகுதிகளை சுற்றி கடலோரத்தில் பவளப்பாறைகள் நிறைந்துள்ளது. இவற்றை சார்ந்து கடல் குதிரை, கடல் அட்டை, ஆமை உள்ளிட்ட 200க்கு மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் விதிமீறி இரட்டை மடி, சுருக்கும்படி, ரோலர் மடி மற்றும் நரம்பு வலையில் மீன் பிடிக்கின்றனர். சிலநேரங்களில் கடலோர பகுதியில் மீன்பிடிப்பதால் பவளப் பாறைகள் வலையில் சிக்கி சேதமடைகிறது. பின் உடைந்த நிலையில் கடல் அலைகளால் கரை ஒதுங்குகிறது.
இதில் ராமேஸ்வரம் வட கடற்கரை ஓலைக்குடா முதல் பாம்பன் லைட்ஹவுஸ் கடற்கரை வரை உடைந்த பவளப்பாறைகள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் ராமேஸ்வரம் தீவின் பாதுகாப்பு அரணாக உள்ள இவை சில மீனவர்களால் அழிந்து வருவதால் எதிர்காலத்தில் தீவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மீன்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்' ராமேஸ்வரம் பகுதியில் தடை செய்த வலையில் மீன்பிடிப்பவர்கள் மீது வழக்கு பதிந்து படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, மானிய டீசல் ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக கடலோரப் பகுதியில் விசைப்படகில் மீன்பிடிக்க தடை உள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பளவப்பாறைகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.