ராமேஸ்வரம் - -கோவை தினசரி ரயில் மீண்டும் இயக்க கோரிக்கை

ராமநாதபுரம்:ராமேஸ்வரம்--கோவை தினசரி விரைவு ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து கோவைக்கு மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த போது தினசரி ரயில் இயக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த பணி 2007 ல் முடிந்து ரயில் சேவை துவக்கப்பட்டது. ஆனால்கோவை--ராமேஸ்வரம் ரயில் மீண்டும் இயக்கப்படவில்லை.

கோவை ரயில் நிலையத்தில் ஏற்கனவே அதிகமாக ரயில்கள் பராமரிக்கப்படுவதால் ஈரோட்டில் கூடுதல் ரயில்களை பராமரிப்பதற்கான வசதிகள் அமைக்கப்பட்டு அதன் பின் ராமேஸ்வரம்--கோவை ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த பணி முடிவடைந்தும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து பீஹார் மாநிலத்தில் உள்ள ஜோக்பானி பகுதிக்கு புதிய அம்ரித் பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

ராமநாதபுரம் ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகி சகாயவினோத் கூறியதாவது:

கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்டு வந்த விரைவு ரயில் கடந்த 18 ஆண்டுகளாக இயக்கப்படாமல் உள்ளது. தற்போது கோவை - -ராஜ்கோட் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் கோவையில் நிறுத்தி வைப்பதற்கு பதிலாக ராமேஸ்வரத்திற்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்படுகிறது. அந்த நாளிலும் ரயில் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. கடந்த வாரம் மட்டும் 1046 பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு போதிய ரயில் வசதி ஏற்படுத்தாமல் வட மாநிலங்களுக்கு தொடர்ந்து புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம்--கோவை விரைவு ரயிலை மீண்டும் இயக்கினால் ராமேஸ்வரத்தில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடுக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும்.

இதனால் தென்மண்டலம், கொங்கு மண்டலம் இடையே தொழில் துறை இணைப்பும் ஏற்படும். மேலும் இதனை கோவை - -பாலக்காடு ரயிலுக்கு இணைப்பாக இயக்கினால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்கும். இதனால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.

Advertisement