ராமேஸ்வரம் கோயிலில் வசூல் இருவர் மீது எஸ்.பி., யிடம் புகார் தினமலர் செய்தி எதிரொலி
ராமநாதபுரம்,:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வெளிநாடு வாழ் இந்திய தம்பதியை ஏமாற்றி தரிசனத்திற்கு அதிக பணம் வசூலித்த இருவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக எஸ்.பி.,க்கு கோயில் இணை ஆணையர் செல்லத்துரை ஆன்-லைனில் புகார் அனுப்பினார்.
அதில் தெரிவித்துள்ளதாவது: ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடவும், சிறப்பு தரிசனம், ருத்ர அபிஷேகம், சங்கு அபிஷேகத்திற்கு தனித்தனி கட்டணங்கள் நிர்ணயித்து ஊழியர்கள் மூலம் டிக்கெட் கொடுத்து வசூலிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன் வெளிநாடு வாழ் இந்திய தம்பதி இக்கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதற்கு அதிகபட்ச கட்டணம் ரூ.3450 தான் செலவாகும். இச்சூழலில் கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் போல் காட்டிக்கொண்டு ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிவாசன், வீரமணிகண்டன் ஆகியோர் தம்பதியிடம் ரூ.30 ஆயிரம் வசூலித்துள்ளனர். இதுகுறித்து ஆடியோ வைரலாகி தினமலர் நாளிதழில் செய்தியும் வெளியானது.
இந்நிலையில் கோயில் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பக்தர்களை ஏமாற்றி கூடுதல் தொகை வசூலித்த இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.