பஸ் நிலையத்தில் கேமராக்கள் இல்லை மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி

1

பெங்களூரு : அதிகமான பயணியர் நடமாடும், மெஜஸ்டிக் மருத்துவமனையில் சிறார்கள், பெண்களின் பாதுகாப்புக்கு கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால், மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி அதிருப்தி தெரிவித்தார்.

பெங்களூரின், மெஜஸ்டிக் பஸ் நிலையத்துக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, நேற்று மாலை ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டு, அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தார்.

'மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில், 2018 முதல் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என, அதிகாரிகள் கூறுகின்றனர். இத்தகைய மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில், மனித கடத்தல் நடக்கும் அபாயங்கள் அதிகம். பெண்கள், சிறார்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, உடனடியாக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துங்கள்.

'மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில், சுத்தமான குடிநீர் வசதி செய்ய வேண்டும். ஆங்காங்கே குப்பை கூடைகள் வைக்க வேண்டும், கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். பிரச்னைகளை சரி செய்த பின், போட்டோக்களுடன் மகளிர் ஆணையத்துக்கு, அறிக்கை அளிக்க வேண்டும்' என, பி.எம்.டி.சி., அதிகாரிகளுக்கு, ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

மெஜஸ்டிக்கில் உள்ள, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தையும், மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி ஆய்வு செய்தார். 'இந்த பஸ் நிலையத்தில், கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுகின்றன. கேமராவில் பதிவாகும் காட்சிகளை, 20 நாட்கள் வரை பாதுகாத்து வையுங்கள். அவசர தொலைபேசி எண்களை, சுவர்களில் பெரிதாக எழுதி வையுங்கள். ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்' எனகே.எஸ்.ஆர்.டி.சி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் பின் கோவிந்தராஜ நகரில் உள்ள, மாநகராட்சி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். இங்கும் சரியான அடிப்படை வசதிகள் இல்லாததை கவனித்து, கோபமடைந்தார்.

'கர்ப்பிணியர், குழந்தை பெற்ற பெண்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை சுத்தமாக இல்லை. நோயாளிகள் காலை 8:00 மணிக்கு டோக்கன் வாங்கி செல்கின்றனர். காலை 10:00 மணிக்கு பின், மருத்துவமனையின் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்படுகிறது.

'மருந்து, மாத்திரைகளை வெளியில் இருந்து வாங்கி வரும்படி, டாக்டர்கள் கூறுவது சரியல்ல. இந்த பிரச்னைகளை சரி செய்யுங்கள்' என, மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement