திருப்பூருக்கு பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம்

திருப்பூர்: துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர். நம் நாட்டின் துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், சி.பி.ராதாகிருஷ்ணன், 152 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதை பா.ஜ.,வினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அவ்வகையில், பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைவர், சீனிவாசன் தலைமையில், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாநகராட்சியிலுள்ள, 60 மண்டலத்திலும் பா.ஜ.,வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதவிர, மண்டல வாரியாக கோவில்களில் வழிபாடு, அன்னதானம் என, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு, இதற்காக தயாராகி வருகின்றனர்.
மீண்டும் ஒரு பரிசு
தமிழகத்தில் இருந்து ஒருவர் உயர் பொறுப்புக்கு சென்றது மிக்க மகிழ்ச்சி. பிரதமர் மோடி, தமிழகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மீண்டும் கிடைத்த ஒரு பரிசு. பிரதமர், தமிழ், தமிழினம், தமிழகம் மீது உள்ள நம்பிக்கைக்கு இதுவும் ஒரு சான்று. துணை ஜனாதிபதியாக திருப்பூரை சேர்ந்தவர், உயர் பொறுப்பில் இருப்பதால், திருப்பூருக்கு தேவையான தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை எடுக்கலாம். கடுமையான மக்கள் பணி, உழைப்புக்கு கிடைத்த பரிசு. பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
- முருகானந்தம், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர்
உன்னத பணிக்கு 'மகுடம்'
துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் மிகுந்த மிகழ்ச்சி. சிறு வயதில் இருந்து கடுமையாக உழைக்கக்கூடியவர். வாஜ்பாய் காலத்தில் இருந்து கட்சியில் கடுமையான உழைப்பு, நேர்மையாக இருந்து மக்கள் பணியாற்றியவர். கோவை குண்டு வெடிப்பின் போது கூட, வீட்டுக்கு வராமல், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்து, அங்கேயே முழு பணியில் இருந்தார். தேசப்பணியை ஆற்ற மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நல்ல உடல் நலத்துடன் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.
- குமரேசன், ராதாகிருஷ்ணனின் சகோதரர்
எளிமையின் அடையாளம்
அனைவரிடம் மிக எளிமையாக பழகக் கூடியவர். இந்த பொறுப்புக்கு அவர் வந்தது, திருப்பூரே பெருமிதம் கொள்கிறது. தேசத்துக்காக கடுமையாக உழைக்க கூடியவர். திருப்பூர் மட்டுமல்லாமல், அவரால் தமிழகத்துக்கு பெருமை. பிரதமர் மோடிக்கு, தமிழகம் மீதுள்ள அன்பின் வெளிப்பாடு. சரியான இடத்தில், சரியான நபரை தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். அவரின் பணி, தேசத்துக்கு தேவைப்படுகிறது. மேலும், சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
- மெஜஸ்டிக் கந்தசாமி, மக்கள் நல அறக்கட்டளை தலைவர்
நம் மண்ணின் மைந்தர்
கொடிகாத்த திருப்பூர் குமரன் பிறந்த மண்ணில், மண்ணின் மைந்தர், இன்று துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதல் மக்களுக்காக பணியாற்றிய உன்னத தலைவருக்கு, இந்த மரியாதையை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். அவர் திருப்பூர் வரும் போது, சிறப்பாக கொண்டாட உள்ளோம். பிரதமர், கட்சி தலைவர் நட்டா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், அனைத்து எம்.பி.,களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். திருப்பூரில் ஒவ்வொரு இடத்துக்கு சென்று மக்கள் பணி ஆற்றியவர். கூடுதலான ஓட்டுக்களை பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.
- சீனிவாசன், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர்
கடின உழைப்புக்கு வெற்றி
இந்த உயர்ந்த நிலைக்கு வர, அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக தன்னுடைய கடின உழைப்பை கொட்டி வந்தவர். எம்.பி.,யாக இருந்த காலத்தில் தொகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்தவர். அவர் வகித்த ஒவ்வொரு பொறுப்பையும், அலங்கரித்து, அதில் நல்ல விஷயங்களை முன்னெடுத்து சாதிப்பவர். அவர் நல்ல உடல் நலத்துடன் மேலும், பணியாற்ற வேண்டும். பிரதமருக்கு, தமிழ் மண், மக்கள் மீது உள்ள பற்றுக்கு இது ஒரு உதாரணம். துணை ஜனாதிபதி ஆக்கிய பிரதமர், அமித்ஷா உள்ளிட்டோருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.
- மலர்க்கொடி, பா.ஜ., மாநில செயலாளர்
தேசம், தெய்வீகம் மீது பற்று
சிறு வயது முதல் ஆன்மிகம், தேசியம் மீது மிகுந்த பற்று கொண்டவர். அவர் பதவி வகித்த ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டார். எம்.பி.,யாக இருந்த போது, மக்களுக்கு தேவையான தொகுதியின் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தார். கதர் போர்டு சேர்மனாக இருந்த போது, அதை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றார். எந்த துறை எடுத்தாலும், ஒரே சிந்தனையாகவும், முழு ஈடுபட்டோடும் இயங்கினார். அவரின் உழைப்பு, தியாகம், விடாமுயற்சிக்கு கிடைத்த பெரிய மகுடம். அவரின் பணி மேலும் சிறக்க வேண்டும்.
- பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் உரிமையாளர்
சக்திவேல் வாழ்த்து!
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், ''புதிதாக தேர்வாகியுள்ள, நம் நாட்டின் துணை ஜனாதிபதியை சந்தித்து, ஆசி பெறும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஆடை ஏற்றுமதியாளராகவும், ஏ.இ.பி.சி., உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளதை பெருமையாக நினைவு கூறுகிறேன்.
கடந்த, 40 ஆண்டு களாக, அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பும், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கு முன்னேற்றம் ஏற்படுத்திய பணியாலும், இன்று, நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்கு அவர் உயர்ந்துள்ளார். நம் நாட்டின் முன்னேற்றத்துக்கான சேவையை அவர் தொடர வேண்டுமென வாழ்த்தினோம்,'' என்றார்.
பொறுமைக்கு அங்கீகாரம்
இருக்கும் இடத்துக்கு விசுவாசமாகவும், பொறுமைக்கும் கிடைத்த அங்கீகாரம் தான், துணை ஜனாதிபதி பதவி. அரசியலில் ஈடுபடும் அனைவரும் தலைவராகுவதில்லை; தலைமை பொறுப்பும் கிடைப்பதில்லை. திருப்பூரை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாவது அனைவருக்கும் மகிழ்ச்சி. பதவி இல்லாத நேரத்தில், மிக அமைதியாக இருப்பார்; அநாகரீக அரசியல் செய்ய மாட்டார். ஒரு கட்சிக்கு மிக விசுவாசமாக இருந்ததற்கு கிடைத்த பரிசு தான் இந்த உயர்ந்த பதவி; இது, திருப்பூருக்கு பெருமை; உண்மைக்கும், விசுவாசத்துக்கும் கிடைத்த வெற்றிதான், துணை ஜனாதிபதி பதவி. எத்தகைய பதவியாக இருந்தாலும், தனது கடமையையும், சேவையையும் சிறப்பாக செய்து முடிப்பார்
- சிவராம், 'கிளாசிக் போலோ' நிர்வாக இயக்குனர்
இறைவன் வழங்கிய பதவி
தமிழகத்துக்கும், குறிப்பாக கொங்கு மண்டலத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அமைந்துள்ளது. இரண்டு முறை எம்.பி., மற்றும் மூன்று மாநில கவர்னர் என்ற வெற்றிப்பயணத்தை தொடர்ந்து, தேசத்துக்கு ஆற்றிய சேவைக்கு பரிசாக, துணை ஜனாதிபதி பதவியை, இறைவன் வழங்கியிருக்கிறார் என்று உணர்கிறேன். பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் சி.பி.ஆர்., பெருமை வாய்ந்த பாரத தேசத்தின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் வாழ்த்துகிறோம்.
- நாகராஜன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர்
விரைவில் வரவேற்பு விழா
திருப்பூர் மண்ணின் மைந்தர், இன்று, துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். எளிதாக அணுகி பேச முடியும்; எளிய வாழ்க்கை நெறியை பின்பற்றுபவர். அவர் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்பதால், தமிழகம் பெருமை கொள்கிறது. திருப்பூர் தொழில் மென்மேலும் வளரவும், தொழிலாளர் நலன், தொழில்முனைவோர் நலனில் தேவையான உதவியை செய்வார். திருப்பூரின் தேவைகளை நன்கு அறிவார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க உறுப்பினரான அவர், துணை ஜனாதிபதி ஆவது மகிழ்ச்சியாக இருக்கிறது; முறையான அனுமதி பெற்று, திருப்பூரில் வரவேற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
- சுப்பிரமணியன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தலைவர்
பெருமிதம் கொள்கிறோம்
திருப்பூர் பின்னலாடை தொழில் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில், எங்களது பின்னலாடை குடும்பத்தை சேர்ந்த, சி.பி.ராதாகிருஷ்ணன், நமது நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளதால், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் பெருமிதம் கொள்கிறது. திருப்பூரும், தமிழகமும் பெருமிதம் அடையும் வகையில், துணை ஜனாதிபதியின் சேவையும், செயல்பாடுகளும் சிறப்புற வாழ்த்துகிறோம்.
- ஈஸ்வரன், 'சைமா' தலைவர்
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
திருப்பூருக்கு பல்வேறு பெருமைகள் கிடைத்திருக்கிறது; என்றாலும், நமது மண்ணின் மைந்தர் புதிய மகுடம் சூடுவதை பெருமையாக கொண்டாடலாம். உலக வரைபடத்தில் திருப்பூர் இருப்பு வைத்துள்ளதை போல், இந்திய அரசியல் வரலாற்றில், தனக்கென தனி இடத்தை கொண்டிருப்பவர், துணை ஜனாதிபதியாக பணியாற்ற போவது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
- ராஜா சண்முகம், தேசிய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர்
தமிழர்களுக்கு பெருமை
கொங்கு மண்டலத்தின் அப்துல்கலாம் என்றே, இன்றைய இளைஞர்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை கொண்டாடுகின்றனர். எவ்வளவு உயர்ந்த பதவியாக இருந்தாலும், அனைவரிடமும் எளிதாக பழகும் நல்ல பண்பு கொண்டவர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நாட்டு மக்களுக்காக நற்பணி ஆற்றுவார்; ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் வாழ்த்துகள்.
- முத்துரத்தினம், 'டீமா' தலைவர்
இது பெருமைமிகு தருணம்
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்கள். தமிழ்நாட்டுக்கும், திருப்பூர் மக்களுக்கும் மிகவும் பெருமை சேர்க்கும் தருணம். அவரது பதவிக்காலத்தில், ஞானம், நேர்மை மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கான அர்ப்பணிப்பு ஆகியவை, நாட்டின் வரலாற்றில் குறிக்கப்படும். திருப்பூர் தொழில்துறையினர் வளர்ச்சிக்கும் தகுந்த ஒத்துழைப்பை வழங்குவார் என்று, ஒட்டுமொத்த திருப்பூரும் மகிழ்ச்சியில் உள்ளது.
- காந்திராஜன், சாய ஆலை, உரிமையாளர்கள் சங்கத்தலைவர்
ஆக்கப்பூர்வ முயற்சி
திருப்பூர் மண்ணின் மைந்தர், நமது நாட்டின் துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் வாயிலாக, தமிழகமும், திருப்பூர் பின்னலாடை தொழிலும் மென்மேலும் வளர்ச்சி பெற வேண்டும். அதற்கான ஆக்கப்பூர்வ முயற்சிகளை அவர் மேற்கொள்வார் என முழு மனதுடன் நம்பிக்கை தெரிவிக்கிறோம்.
- மணி, 'டிப்' தலைவர்
வளர்ச்சிக்கு உடனிருப்பார்
துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர். திருப்பூர் வளர்ச்சிக்காக, அவரது சேவைப்பணி செய்திருக்கிறார். தற்போது, மிகப்பெரிய பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்துள்ளது. தான் பிறந்த மண்ணுக்கும், மாநிலத்துக்கும் மிகப்பெரிய நன்மைகளை செய்வார். குறிப்பாக, திருப்பூர் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 18.50 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது; அது, 20 சதவீதமாக உயரும். அதற்கான பல்வேறு திட்டங்களில், துணை ஜனாதிபதியாக அவரும் உடனிருப்பார்.
- குமார் துரைசாமி, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட இயக்குனர்
தொழில் சிறக்கும்
நம் நாட்டின், 2வது மிக உயரிய பதவிக்கு வெற்றி பெற்றுள்ள, மண்ணின் மைந்தர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அனைவருக்கும் பொதுவான பொறுப்பாக இருந்தாலும், 'டாலர் சிட்டி'யில் இருந்து செல்லும் அவர், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, திருப்பூரின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். பனியன் தொழில் சிறக்க ஆவன செய்வார் என்று நம்புகிறோம்.
- கோவிந்தராஜ், எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்க தலைவர்
வெற்றி தொடரட்டும்...
இந்தியாவின் நெய்தல் நகர் என்று உலக புகழ்பெற்றது திருப்பூர் நகரம். நகரின் உழைக்கும் தன்மையையும், கொங்கு நாட்டு நேர்மையும் பிரதிபலிக்கும் வகையில், எங்களுடன் பயணித்தவர், இன்று நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருப்பது தொழில்முனைவோருக்கு மகிழ்ச்சி. தொழில் வளர்ச்சிக்கு, அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றி வந்தவர். இனிமேல், திருப்பூர் முன்னேற்றத்துக்கு புதிய வாய்ப்புகள் திறக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது; அவரது வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகள்.
- அண்ணாதுரை, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு
தெளிவான சிந்தனை
நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் புதிய துணை ஜனாதிபதியின் தலைமைப்பணி மிகவும் சிறப்பாக இருக்கும். அர்ப்பணிப்பு, ஆடம்பரம் இல்லாத எளிய தோற்றம், தெளிவான சிந்தனை மற்றும் தொலைநோக்கு பார்வை, இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும். அவரது சேவையால், நாட்டு மக்கள் நம்பிக்கை அடைவார்கள். அவருடைய வெற்றி, அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.
- நாகேஷ், 'டைஸ் அண்ட் கெமிக்கல்' வியாபாரிகள் சங்க தலைவர்
நாட்டுக்கே பெருமை
திருப்பூரை சேர்ந்தவர் துணை ஜனாதிபதி ஆகிறார் என்று, நாம் கொண்டாடலாம்; அதற்காக, நாம் மட்டுமே உரிமை எடுத்துக்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த தேசத்துக்கான துணை ஜனாதிபதி. பொதுநபராகத்தான் இருப்பார். இதுவரை தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளை நாம் கொண்டாடலாம். தற்போது, நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை மற்றும் பொறுப்பு, துணை ஜனாதிபதிக்கு இருக்கிறது. நாட்டுக்கே பெருமை சேரும் வகையில் செயல்படுவார்.
- ராமன் அழகிய மணவாளன், ஏற்றுமதி வர்த்தக ஆலோசகர்
வரவேற்புக்குரியது...
தற்போதைய அசாதாரண சூழலில், திருப்பூரை சேர்ந்தவர், பனியன் தொழில் குறித்து நன்கு அறிந்தவர், துணை ஜனாதிபதியாவது வரவேற்புக்குரியது. திருப்பூர் தொடர்பான கோரிக்கைகளை, இவர் வாயிலாக எளிதாக மத்திய அரசிடம் கொண்டு சேர்க்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
- மோகன், 'யங் இந்தியன்ஸ்' அமைப்பு தலைவர்
திருப்பூர் வரலாற்றில் முக்கிய மைல் கல்
திருப்பூருக்கு பல்வேறு பெருமை கிடைத்துள்ளது; திருப்பூரில் இருந்து சென்ற முதல் கவர்னர் என்ற பெருமையை தாண்டி, துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளதை, திருப்பூரே கொண்டாடுகிறது. உலக வரைபடத்தில், தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள திருப்பூர் வரலாற்றில், சி.பி.ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக தேர்வானது முக்கிய மைல்கல்லாக இருக்கும்.
- கோவிந்தராஜ், 'நிப்ட்-டீ' கல்லுாரி தலைவர்
உறுதுணையாக இருப்பார்
இரண்டு முறை எம்.பி.,யாக பணியாற்றிய, விவசாய குடும்பத்தில் பிறந்தவர், இன்று துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். ஆளுநராக சேவையாற்றியவர், மேலும் உயர்பதவிக்கு தேர்வாகியுள்ளார். பனியன் தொழில் குறித்து நன்கு அறிந்தவர் தேர்வாகியுள்ளதால், பின்னலாடை தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார். நாட்டின் மிக உயரிய பதவிக்கு ராதாகிருஷ்ணன் தேர்வானது திருப்பூருக்கு மட்டுமல்ல, கொங்கு மண்டலத்துக்கே பெருமை.
- விவேகானந்தன், 'சிம்கா' தலைவர்
அனுபவம் கைகொடுக்கும்
தமிழகத்துக்கும், திருப்பூருக்கும் பெருமை சேர்க்கும் வகையில், சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார்; வணங்கி மகிழ்கிறோம். அவரது, வளமான, அனுபவம் வாய்ந்த அவரது சேவை, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையாக இருக்கும்.
- கோபாலகிருஷ்ணன், கம்ப்யூட்டர் எம்பிராய்டர்ஸ் அசோசியேஷன் தலைவர்
எளிமையான மனிதர்
திருப்பூரை சேர்ந்தவர், நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கிறார். எளிமையான மனிதர்; சிறந்த தேச பக்தர்; தமிழகத்துக்கே மிகச்சிறந்த முன்னுதாரமாக வாழ்பவர். கட்டுக்கு அப்பாற்பட்டு, அனைவரிடமும் நல்லுறவு கொண்டவர்; அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
- சிவக்குமார், தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர்
முன்னுதாரணமாக விளங்குவார்
நமது ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி. எம்.பி.,யாக இருந்த போது, லயன்ஸ் கிளப்புடன் இணைந்து பல்வேறு சேவைப்பணிகளை செய்துள்ளோம். அவருடன் தான், சபரிமலைக்கு சென்று வருவோம்; 'பம்பா சங்கமம்' என்ற கமிட்டியுடன் இணைந்து செயல்பட்டு வந்தோம். மக்கள் பணி, ஆன்மிக பணியில், எளிய தோற்றுத்துடன் இருந்து, வலிமையான சேவையை செய்வார். துணை ஜனாதிபதி பதவிக்கே முன்னுதாரணமாக விளங்குவார்.
- முருகேசன், திருப்பூர் ஒசைரி நுால் வியாபாரிகள் சங்க தலைவர்

மேலும்
-
மின்துறை அதிகாரி வீட்டில் ரெய்டு: தெலுங்கானாவில் ரூ.2 கோடி ரொக்கம் மீட்பு
-
விவசாய உற்பத்தியை அதிகரிக்க உர பற்றாக்குறையை தவிர்க்கணும்; பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை
-
மோசடி செய்து பாமக முகவரி மாற்றம்: அன்புமணி மீது ஜிகே மணி குற்றச்சாட்டு
-
திமுகவினர் கள்ளச்சாராயம் விற்கின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் புதிதாக 6000 ஓட்டுச்சாவடிகள்: ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 74,000 ஆக உயருகிறது
-
வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து: அசாமில் அரசு அதிகாரி கைது