கவுன்சிலர் கூட ஆகவில்லை; எங்களை விமர்சிக்கும் தேவை விஜய்க்கு இல்லை என்கிறார் நயினார் நாகேந்திரன்

22


சென்னை: தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


சென்னை, அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கூட்டணியை மட்டும் பலமாக வைத்து இருந்தால் போதுமா, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டாமா? திமுக கூட்டணியை அசைப்போம். உறுதியாக ஆட்சி மாற்றம் வரும்.

தேஜ கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி வலுப்பெறும். திமுக தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்த வரலாறு இல்லை. எனவே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம். எங்களுடைய கூட்டணி வெற்றி பெறும்.



தமிழகத்தில் நல்லாட்சி மலரும். விஜய் கட்சி ஆரம்பித்து பிரசாரத்தை ஆரம்பித்து இருக்கிறார். அவருடைய நோக்கமும் திமுகவை அகற்றுவது தான். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. ஒரு எம்எல்ஏக்கள் கூட கிடையாது. இப்போது தான் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள்.


எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என்று நான் நினைக்கிறேன். புதிதாக கட்சி ஆரம்பித்தால் வேடிக்கை பார்க்க நிறைய பேர் வருவார்கள். தேர்தல் காலத்தில் ஓட்டு எவ்வளவு வாங்குவார் என்பது தான் முக்கியம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement