அதீத மகிழ்ச்சி காரணமாக அதிகம் பேச முடியவில்லை: இளையராஜா உருக்கம்

சென்னை: '' நேற்றைய பாராட்டு விழாவில் அதீத மகிழ்ச்சி காரணமாக அதிகம் பேச முடியவில்லை ,'' என இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
பாராட்டு விழா
சிம்பொனி இசையமைத்து சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா, திரைப்படங்களுக்கு இசையமைக்கத் துவங்கி, 50 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50' என்ற பெயரில், சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று, அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
நன்றி
அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதிக்கும், அமைச்சர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். எனக்கூறியுள்ளார்.
@twitter@https://x.com/ilaiyaraaja/status/1967161424268153290 twitter
ஆனந்தம்
அத்துடன் அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் அதிக மகிழ்ச்சி காரணமாக எனக்கு பேச்சு வரவில்லை. சரியாக பேச முடியவில்லை. உள்ளத்தில் நினைப்பது எல்லாம் வெளியில் வார்த்தையாக வருவது என்பது அந்தந்த நேரத்தை பொருத்தும் சூழ்நிலை பொருத்தும் அமைவது. நேற்று எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. அவ்வளவு ஆனந்தம்.
ஒரு பாராட்டு விழாவை இவ்வளவு சிறப்பாக முதல்வர், அரசு முனைப்பு எடுத்து செய்ததுடன், எல்லா அமைச்சர்களும், தலைமைச் செயலாளர், அதிகாரிகள் பங்கேற்று ஈடுபாட்டுடன் செய்ததை என்னால் நம்ப முடியவில்லை. இதனால் ஏற்பட்ட அதிக ஆனந்தம் காரணமாக பேச்சு வரவில்லை.
சிம்பொனியின் சிகரம்
எதற்காக இதை செய்கிறீர்கள் என முதல்வரிடம் கேட்டேன். பல பேர் பல விதமான நினைக்கலாம். அதற்கு என்ன காரணம். இவ்வளவு அன்பு செலுத்துவதற்கு நான் என்ன செய்தேன். நான் போட்ட இசையாக இருக்கலாம். அது வேற சமாச்சாரம். அதை அவர் தான் சொல்ல முடியும். நான் இதை எல்லாம் எதிர்பார்க்கிறவன் அல்ல. அப்படிப்பட்ட ஒருவனுக்கு பாராட்டு விழா நடத்துவது என்பது, சிம்பொனியின் சிகரம் தொட்டதால் தான் இந்த பாராட்டு விழாவை மிகவும் முக்கியமாக கருதி இருக்கிறார் என்பது இப்போது எனக்கு புரிகிறது. ஒரு உலக சாதனை படைத்த ஒரு தமிழனை பாராட்டுவது என்பது தமிழக அரசின் கடமை என்று அவர் கருதுகிறார் என நினைக்கிறேன்.
குறையில்லை
முதல்வர் என்னிடம் சில வேண்டுகோளை வைத்தார். அதன் சங்கத்தமிழ் பாடல்களை வரிசையாக கூறினார் அவர் கூறிய நூல்கள் கூட எனக்கு தெரியாது. பதிற்றுப்பத்து, பதிணெண்கீழ்கணக்கு நூல்களை மனப்பாடமாக, அல்ல இயல்பாக சொன்னது எனக்கு வியப்பை அளித்தது. இதற்கு நான் இசையமைக்க வேண்டும் என சொல்வது என்பதும், உங்களைத் தவிர வேறு யாரும் அதை செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன் என்று சொன்னதும் எனக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது.கண்டிப்பாக அவர் வேண்டுகோளை நான் நிறைவேற்றுவேன். மற்றபடி விழாவில் எந்த குறையும் இல்லை.
சிறு விஷயம்
இந்நிகழ்ச்சிக்கு நடிகர்கள் ரஜினி, கமல் வந்து விழாவை சிறப்பித்தது விழாவிற்கு மகுடம் சுற்றியது போல். ஆனால் விழாவிற்கு வந்தவர்கள் சிம்பொனி எப்படி இருந்தது என்றும், அல்லது எங்களுடைய 50 வருட திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது என்றும், அதில் நடந்த சம்பவங்கள் பற்றி சொல்லாதது எனக்கு ஒரு சிறு விஷயம். ஒரு சிறு விஷயமாக இருந்தாலும் விஷயமாகப்பட்டது. ஆனால் அவர்கள் ரசிகர்களுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும்.
@quote@பல மேடைகளில் ரஜினியும், கமலும் என்னிடம்,' அவருக்கு நல்ல பாட்டு போட்டு இருக்கிறீர்கள்' என்று கூறியுள்ளனர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இருவருக்கும் நல்ல பாட்டு போட்டு இருக்கிறேன் என்பதற்கு அவர்களின் வார்த்தையை சாட்சி.
quote
நிச்சயம்
வந்திருந்து அமைச்சர்கள்ல அன்பர்கள், முக்கியமானவர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் சிம்பொனியை பார்த்து, கேட்டது எல்லாம் மகிழ்ச்சிகரமான விஷயம். தமிழக மக்களுக்கு மட்டும், இட அமைப்பு காரணமாக காண முடியாமல் போய்விட்டது. மக்களுக்காகவே ஒரு நிகழ்ச்சி நடத்துவேன் என மேடையிலே கூறி விட்டேன் கண்டிப்பாக நடக்கும். அதனை மக்கள் எதிர்பார்க்கலாம் அந்த நாளை நானும் அவனாக எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் இளையராஜா கூறியுள்ளார்.










