கடுமையான தாக்குதல்களால் காசா பற்றி எரிகிறது: இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பகீர்

31

ஜெருசலேம்: "காசா நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட பலத்த தாக்குதல்களுக்குப் பிறகு பற்றி எரிகிறது" என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார்.



பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், "காசா நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட பலத்த தாக்குதல்களுக்குப் பிறகு பற்றி எரிகிறது" என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் தெரிவித்தார். காசா நகரத்தை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் ஒரு புதிய தாக்குதலைத் திட்டமிட்டு வரும் நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸின் கருத்துக்கள் வந்துள்ளன.



இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியதாவது: காசாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதலை தொடங்கி விட்டனர். எனவே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கு மிகக் குறுகிய கால அவகாசம் மட்டுமே உள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம்.


எங்களுக்கு இனி மாதங்கள் இல்லை, அநேகமாக நாட்கள் மற்றும் சில வாரங்கள் மட்டுமே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement