இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப்புலி குட்டி: 70 ஆண்டுக்கு பிறகு இனத்தை பாதுகாக்கும் முயற்சிக்கு கிடைத்த நம்பிக்கை!

2


போபால்: இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப்புலி குட்டி முகி, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இது, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கிப்புலிகளை கொண்டு வரப்பட்ட திட்டமும், அதன் நோக்கமும் வெற்றி அடைந்திருப்பதை காட்டுவதாக உள்ளது.


ஒரு காலத்தில் இந்திய வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிவிங்கிப்புலிகள் இருந்தன. தொடர் வேட்டை காரணமாக, அவை முற்றிலும் அழிந்து போயின. கடைசியாக சத்தீஸ்கர் வனப்பகுதியில் 1950ம் ஆண்டில் சிவிங்கிபுலி தென்பட்டது. அதன்பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் எந்த பகுதியிலும் சிவிங்கிபுலி கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியக்காடுகளில் அந்த இனம் முற்றிலும் அழிந்து போனதாகவே அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அழிந்த சிவிங்கி புலி இனத்தை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தது. ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.

இவை பிரதமர் மோடியால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குனோ-பல்புர் தேசிய பூங்காவில் திறந்து விடப்பட்டன. அங்கு சிவிங்கி புலிகள் தீவிர பராமரிப்பில் இருந்தது. இருந்தாலும் வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களாக நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கி புலிகள் ஒவ்வொன்றாக உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது.

ஆனாலும் அழிந்த இனத்தை மீட்டெடுக்க வனத்துறையில் விடாப்பிடியாக முயற்சி மேற்கொண்டனர். தற்போது அந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு பிறகு சிவிங்கி புலி இனம் இந்தியாவில் மீண்டும் வந்தது மட்டுமல்லாமல் இனப்பெருக்கம் செய்து வருகிறது.
2022ம் ஆண்டில் நமீபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பிறகு இந்திய மண்ணில் பிறந்த முதல் குட்டியான முகி, வெப்ப அலையில் மூன்று உடன்பிறப்புகளை இழந்து தனது தாயால் கைவிடப்பட்ட பிறகும் உயிர் பிழைத்து விட்டது.



தற்போது அந்த சிவிங்கிப்புலிக்கு மூன்று வயதாகிறது. கடந்த மார்ச் 29ம் தேதி 2023ம் ஆண்டு குனோ தேசிய பூங்காவில் முகி பிறந்தது. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது. இது வனத்துறையினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:


முகி சிவிங்கி புலி குட்டி நன்றாக வளர்ந்து வருகிறது. குனோ தேசிய பூங்காவில், கால்நடை டாக்டர்கள் மற்றும் பூங்கா ஊழியர்கள் கண்காணிப்பில் உள்ளது. மூன்று உடன்பிறப்புகளை இழந்து தனது தாயால் கைவிடப்பட்ட பிறகும் முகி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கிறது. இது, இந்த திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைந்துள்ளதை காட்டுவதாக உள்ளது.

தற்போது குனோ பூங்காவில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிவிங்கிப்புலிகள், அவை ஈன்ற குட்டிகள் என மொத்தம் 25 சிவிங்கிப்புலிகள் உள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement