பயிர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வர்த்தக மையத்தில் 'வேளாண் வணிகத் திருவிழா' நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடக்கும், இந்த திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், விதை, செடி விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
கல்வியில் மட்டுமல்ல பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. விவசாயிகளுக்கு நல்ல முன்னெடுப்பாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் விவசாயிகளுக்கு உருவாகும். வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் முன்னேறி வருகிறது. மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்து வருகிறோம். உரங்களை போதிய அளவில் வழங்கும் படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நடபாண்டில் 5. 65 லட்சம் ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. மக்காச்சோளம், கரும்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. குறு தானியம், நிலக்கடலை உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம்.
முதலிடத்தை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறோம். 47 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு கொண்டு வந்துள்ளோம். கடந்த நான்கு ஆண்டுகளில் 456.46 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை எட்டி உள்ளோம். தமிழகம் முந்திரி வாரியம் என்னும் தனி அமைப்பை உருவாக்கியுள்ளோம். 7 விளைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்று தந்துள்ளோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்தியா மறக்காது
முன்னதாக, சென்னையில் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வயிறு நிரம்பினால் மட்டும் போதாது, நாம் சாப்பிடுவது மிகவும் சத்தான உணவாகவும் இருக்க வேண்டும் என்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும், உணவு பாதுகாப்பின் காவலர் அவர்.
மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா மறக்காது. பசியால் நடக்கும் இறப்புகள் குறைந்துள்ளதற்கு எம்.எஸ். சுவாமிநாதன்தான் காரணம். பல கோடி பேரின் வாழ்க்கையில் தாக்கத்தை உண்டாக்கியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். அவர், தான் கொண்ட அறிவை, அறிவியலை மக்கள் பசிபோக்க பயன்படுத்திய சிந்தனையாளர்.
மண்ணுயிர் காக்கும் எங்களது முயற்சிக்கு அறிவியலாளர்கள் துணை நிற்க வேண்டும். சத்தான, மக்கள் தொகைக்கான தேவையை தீர்க்கும் ஆற்றல் உள்ள பயிரை கண்டறிய பாடுபட வேண்டும். கால நிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
@block_G@
மத்திய அரசின் இபிஎப்ஓ வெளியிட்ட புள்ளிவிவரத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆண்டுக்கு 12.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது திராவிட மாடல் அரசு. தொழில்வளர்ச்சியின் மிகச் சிறந்த குறியீடு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான். திராவிட மாடல் அரசின் ஓட்டம் வேகமாக தொடரும்'' என குறிப்பிட்டுள்ளார்.block_G









