அபுதாபியில் சிக்கிய பயங்கரவாதி இந்தியாவுக்கு நாடு கடத்தல்


சண்டிகர்: பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பாபர் கல்சா இன்டர்நேஷனல் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் ஒன்று பாபர் கல்சா இன்டர்நேஷனல். இந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பிண்டி என்று அழைக்கப்படும் பர்மீந்தர் சிங், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான். குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பட்டாலாவில் பெட்ரோல் குண்டு தாக்குதல்கள், வன்முறைத் தாக்குதல்கள் உள்பட பல்வேறு குற்றங்களில் தேடப்பட்டு வந்துள்ளான். இவன், வெளிநாட்டில் தஞ்சமடைந்த பயங்கரவாதிகள் ஹர்விந்தர் சிங் மற்றும் ஹேப்பி பாஸியாவின் நெருங்கிய உதவியாளனாக இருந்து வந்துள்ளான்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்ட பர்மீந்தர் சிங்கை, அந்நாட்டு உதவியுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளான்.

இது தொடர்பாக பஞ்சாப் போலீசார் கூறியதாவது; ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் தலைமையில் 4 பேர் கொண்ட குழு செப்டம்பர் 24ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்தது. அங்கு இந்தக் குழு வெளியுறவுத் துறை மற்றும் அந்நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டது. பிறகு, பர்மீந்தர் சிங்கை நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. அனைத்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் முடித்த பின்னர், போலீஸ் குழு குற்றவாளியை நீதியின் முன் நிறுத்த உள்ளது, என தெரிவித்துள்ளது.

Advertisement