திமுக குடும்பத்திற்கு ஊழல் பணத்தை டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷின்; செந்தில் பாலாஜியை விமர்சித்த விஜய்

50

கரூர்: கரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் நடிகர் விஜய், திமுகவையும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கடுமையாக விமர்சித்தார். அவரது பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.

நாமக்கல்லில் நேற்று பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:

பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும், கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்கள். ஆட்சியே முடியப் போகுது, இப்போ போய் மத்திய அமைச்சரிடம் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். ஐயா, அமைச்சரே இதுதான் உங்க டக்கா?

இங்கு விமான நிலையம் கட்டினால் ஜவுளித் தொழில் எல்லாம் வளர்ச்சியடையும். ஆனால், பரந்தூர் போல் அல்லாமல் மக்கள் பாதிக்கப்படாத வகையில் விமான நிலையம் கட்டினால் சரி. மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக ஆக்கியது மட்டுமல்லாமல், சட்டவிரோத கல்குவாரிகளால் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. இதுக்கு எல்லாம் யார் பொறுப்பு முதல்வர் சார்?

காலை 11 மணிக்கு பதவியேற்றால், 11.05க்கு மணல் கொள்ளையடிக்கலாம் என்று சொன்னவங்க தானே உங்க ஆட்கள். உங்க ஆட்சி வந்தால் பஞ்சபட்டி ஏரிக்கு உயிர் வரும். மக்கள் பாதிக்காத வகையில், ஜவுளி தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அறிவியல் பூர்வமாக வெளியேற்ற நடவடிக்கை?

கரூரில் இருக்கும் முக்கியமான பிரச்னைகளை பார்த்தோம். ஆனால், இன்னொரு முக்கிய பிரச்னைக்கு காரணமானவரை பற்றி பேசாமல் போக முடியுமா? கரூரில் அமைச்சர் அமைச்சர் ஒன்று இருந்தாரே, அவரு இப்போது அமைச்சர் இல்ல. ஆனால், அமைச்சர் மாதிரி தான். ('பாட்டிலுக்கு பத்து ரூபா... என்று பாடலை பாடினார்). கரூரில் அண்மையில் ஒரு விழா நடத்துனாங்களே, 30 பேரு விழாவா? சாரி முப்பெரும் விழா.


அந்த விழாவில் முன்னாள் அமைச்சரை (செந்தில் பாலாஜி) முதல்வர் ஸ்டாலின் மெச்சி பேசினார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஸ்டாலின் இங்கு வந்த போது, முன்னாள் அமைச்சரைப் பற்றி என்ன எல்லாம் சொன்னாரு, என்ன எல்லாம் கேட்டாரு.

இப்போது, திமுகவில் முன்னாள் அமைச்சர் என்னவா இருக்கிறாரு? என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா? திமுக குடும்பத்திற்கு ஊழல் பண்ணும் பணத்தை 24 மணிநேரமும் டெலிவரி செய்யும் ஏடிஎம் மெஷினாக இருக்கிறாராம்.

அப்படிணு நான் சொல்லலை. ஊருக்குள்ளே பேசிக்கொள்கிறார்கள். இங்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கிறதா? இல்லையா? போலீஸ் கைகள் எல்லாம் கட்டப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் 6 மாதம் தான் ஆட்சி மாறும், காட்சி மாறும். ஆட்சி அதிகாரம் கைமாறும், இவ்வாறு அவர் கூறினார்.
முடிவில் பிரசாரத்தில் மாயமான 9 வயது பெண் குழந்தையை கண்டுபிடித்துத் தரக்கோரி தொண்டர்களிடம் விஜய் கோரிக்கை விடுத்தார்.



@block_Y@39 பேர் உயிரிழப்பு

கரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கர நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர் block_Y


முதல்வர் உத்தரவின் பேரில் கரூர் அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்றுள்ளார். மேலும், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மகேஷ் ஆகியோரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அதேபோல, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் மருத்துவமனைக்கு நேரில் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும், கரூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்களை தயார் நிலையில் வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், கரூர் நிலவரம் குறித்து கலெக்டர் தங்கவேலுவிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

Advertisement