கரூர் சம்பவம் தமிழகத்திற்கு ஒரு கருப்பு நாள்; பிரேமலதா உருக்கம்

கரூர்: கரூரில் 40 பேரை பலிகொண்ட துயர சம்பவம் தமிழகத்திற்கு ஒரு கருப்பு நாள் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.

கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரக்கூட்டத்தில் 40 பேர் பலியாகினர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தமது விசாரணையை தொடங்கி உள்ளது.

இந் நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது;

நடந்த சம்பவம் என்ன என்பது குறித்து நான் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கேட்டேன். அவர்கள் பாதை குறுகலாக இருந்ததாக சொன்னார்கள். அது அதிகம் பேர் செல்ல போதுமானதாக இல்லை. விஜய் மிகவும் தாமதமாக தான் வந்தார்.

காலை 9 மணிக்குள்ளே அனைவரும் அங்கு கூடியிருந்தனர். ஆனால் விஜய் மாலை 7 மணிக்கு தான் வந்தார். வெயில் அடித்தது, தண்ணீர் இல்லை, உணவும் இல்லை.

இதற்கு பல காரணங்கள் உள்ளன. காவல்துறை போதிய பாதுகாப்பை வழங்கவில்லை. விஜய்யைப் பார்க்க வரும் அவரது ரசிகர்களை விஜய் தரப்பு கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

மக்களுக்கு விஜய் என்ன பாதுகாப்பு அளிக்கிறார்? இது தவறு. இது தமிழகத்துக்கும் விஜய் கட்சிக்கும் ஒரு பெரிய உதாரணம். இது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது… நேற்றைய தினம் தமிழகத்திற்கு ஒரு கருப்பு நாள்.

இவ்வாறு பிரேமலதா கூறினார்.

Advertisement