6 ஆண்டுகளில் முதல் முறையாக முடங்கியது அமெரிக்க அரசு நிர்வாகம்: காரணம் என்ன?

3

வாஷிங்டன்: கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக, அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பெரும்பாலான செயல்பாடுகள் முடங்கியது. இதனால் அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் கடுமையான பாதிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.


அமெரிக்காவில் வழக்கமாக ஒருமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. செலவினங்கள் தொடர்பான மசோதாவை அந்நாட்டு பார்லிமென்டில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றால் தான், அடுத்த ஆண்டுக்கான அரசின் செலவினங்களுக்கு நிதி அங்கீகரிக்கப்படும்.

இந்த சூழலில், செனட் ஒரு தற்காலிக நிதி மசோதாவை நிறைவேற்ற தவறியதை தொடர்ந்து, ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அரசு அலுவலகங்களில் செயல்பாடுகள் முடங்கின. இது நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தியது.



செனட் சபையில் தற்காலிக நிதி மசோதாவுக்கு ஆதரவாக 55 சதவீத ஓட்டுக்களும், எதிராக 45 சதவீத ஓட்டுக்களும் பதிவாகின. ஒரு மசோதா நிறைவேற 60 சதவீத ஓட்டுக்கள் தேவை. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்துள்ள நிலையில் அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கி உள்ளது.


இதனால் அமெரிக்க நேரப்படி புதன் கிழமை (அக் 1) நள்ளிரவு 12.01 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும். இதனால் அத்தியாவசியமற்ற பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் 7.50 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
இதனால் ஒரு நாளைக்கு 400 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த கால வரலாறு



டிரம்பின் கடந்த ஆட்சி காலத்தில், செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால், 35 நாட்கள் அமெரிக்க நிர்வாகம் முடங்கியது.



கடந்த 2013ம் ஆண்டு ஒபாமா நிர்வாகத்தில் செலவின மசோதா தோல்வி அடைந்த காரணத்தினால் 16 நாட்கள் நிர்வாகம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement