கடலுாரில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில்... இயக்கப்படுமா: வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கடலுார்: கடலுாரில் இருந்து சென்னை, கோயம்புத்துார், பெங்களூருவிற்கு நேரடி ரயில்கள் இல்லாததால் வர்த்தகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கடலுார் பழம்பெருமை வாய்ந்த நகரமாகும். மன்னர் காலத்திலும், பிரிட்டிஷ் காலத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும், கடல்வழி போக்குவரத்து மூலம் பல்வேறு நாடுகளுடன் வணிகத்தொடர்பு உடைய நகரமாகவும் இருந்தது.

கடலுார் மாநகரில் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலுார் துறைமுகம் என இரண்டு ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன. இதில் திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பெங்களூருவிற்கு நேரடி ரயில்கள் எதுவும் இயக்கவில்லை.

கடலுார் துறைமுகம் வழியாக காரைக்காலில் இருந்து பெங்களூருவிற்கு எஸ்.எம்.வி.டி., ரயில் மற்றும் கடலுார் துறைமுகத்தில் இருந்து மைசூர் வரை மைசூரு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.

கோயம்புத்துாருக்கு கடலுார் துறைமுகத்திலிருந்து நேரடி ரயில்கள் எதுவும் இயக்கவில்லை. திருப்பாதிரிப்புலியூர் வழியாக தாம்பரத்திலிருந்து கோயம்புத்துார் செல்லும் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படுகிறது.

தலைநகரான சென்னைக்கு கடலுார் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் துறைமுகம் ரயில்வே ஸ்டேஷன்களில் இருந்து நேரடி ரயில்கள் எதுவுமே இயக்கவில்லை என்பது குறையாக உள்ளது.

கடலுார் துறைமுகம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்னைக்கு உழவன் எக்ஸ்பிரஸ், ஆர்.எம்.எம்.எக்ஸ்பிரஸ், தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும், திருப்பாதிரிப்புலியூர் வழியாக செந்துார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், தாம்பரம் வரை செல்லும் அந்தியோதியா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களும், சோழன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் துறைமுகம் மற்றும் திருப்பாதிரிப்புலியூரில் நின்று செல்கிறது.

இந்த ரயில்கள் கடலுாரில் இருந்து நேரடியாக இயக்காததால் போதிய இடவசதி கிடைக்காமல் பொதுமக்கள், வியாபாரிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, கடலுாரில் இருந்து சென்னை, கோயம்புத்துார், பெங்களூருவிற்கு நேரடி ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement