ஊட்டியில் வாகன நெரிசல் தவிர்க்க புதிய உத்தரவு

ஊட்டி: கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து, நீலகிரி எல்லைக்குள் வரும் சுற்றுலா பஸ்களை தலைகுந்தா பகுதியிலேயே நிறுத்த உத்தரவிடப்பட்டது. ஊட்டி நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுற்றுலா பஸ்களை ஊட்டி நகருக்குள் அனுமதி இல்லை. சுற்றுலா மாவட்டமான நீலகிரிக்கு, தினசரி சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதிலும் தொடர் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்.


கேரளா, கர்நாடக மாநிலங்களிலிருந்து சிறிய வாகனங்கள் தவிர, சுற்றுலா பஸ்களிலும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் விடுமுறை காரணமாக கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய நகரப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.



இந்நிலையில் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களில், பஸ்களை தலைகுந்தா பகுதியில் நிறுத்த உத்தரவிடப்பட்டது. சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வேறு வாகனங்களில் ஊட்டி நகருக்குள் செல்லவும், சோதனை சாவடிகளில் இந்த தகவலை தெரிவித்து அனுமதியளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதனால் ஊட்டி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் குறைந்தாலும், சுற்றுலா பயணிகள் மன உளைச்சலுடன் வந்து செல்லும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

Advertisement