கோப்பை மறுப்பு: சூர்யகுமார் கொதிப்பு

துபாய்: ''கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற ஒரு அணிக்கு கோப்பை தர மறுத்தது நிகழ்வை, இதற்கு முன் ஒருபோதும் பார்த்தது இல்லை,'' என இந்திய கேப்டன் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
'ஆப்பரேஷன்' சிந்துார் நடவடிக்கைக்குப் பின் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் இடையில் பதட்டம் அதிகமாக உள்ளது. இது ஆசிய கோப்பை தொடர் முழுவதும் நீடித்தது. லீக் சுற்று வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்த சூர்யகுமாருக்கு, ஐ.சி.சி., 30 சதவீத சம்பளத்தை அபராதமாக விதித்தது. 'சூப்பர்-4' சுற்றில் எதிரணியின் ஹாரிஸ் ராப், போர் விமானங்கள் தாக்கப்படுவதைப் போல சைகை காட்ட, அவருக்கும் அபராதம் (30%) விதிக்கப்பட்டது. எதிரணியின் பர்கான், துப்பாக்கியில் சுடுவது போல, பேட்டை வைத்து சைகை காட்டினார்.
எகிறிய பதட்டம்
இதனால் இரு அணிகள் இடையிலான பைனல், பதட்டத்தை ஏற்படுத்தியது. பைனலுக்கு முந்தைய 'போட்டோ ஷூட்டிற்கு' சூர்யகுமார் செல்ல மறுத்தார்.
தவிர, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி (பாக்., அமைச்சர்), பைனலுக்கு முன், 'கால்பந்து வீரர் ரொனால்டோ, சைகை செய்த வீடியோவை பதிவிட்டார். இது இந்திய வீரர்கள் கோபத்தை அதிகப்படுத்தியது.
இதனால், 'நாங்கள் வெற்றி பெற்றால் நக்வி கையில் இருந்து கோப்பை வாங்க மாட்டோம்,' என்றார் சூர்யகுமார். பைனலில் ராப்பை போல்டாக்கிய பும்ரா, அவரைப் போல சைகை செய்து பதிலடி கொடுத்தார். இது சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. கடைசியில் ரிங்கு சிங் பவுண்டரி அடிக்க, இந்திய அணி சாம்பியன் ஆனது.
கோப்பை இல்லை
போட்டி முடிந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் வர மறுத்து ஒரு மணி நேரமாக பிடிவாதம் செய்தனர். இந்திய அணியினர் நக்வியை தவிர, வேறு யார் கோப்பை வழங்கினாலும் பெற்றுக் கொள்ள தயாராக இருந்தனர். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி கோப்பை வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
பின் ஒன்றரை மணி தாமதத்துக்குப் பின் பரிசளிப்பு விழா துவங்கியது. இரண்டாவது இடத்துக்கான விருதை பெற்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அகா, மேடையில் இருந்த படியே துாக்கி எறிந்து, அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்து இந்திய அணியினர் கோப்பை பெறும் போது, மேடையில் நக்வி இருக்கக் கூடாது என வற்புறுத்தினர். இதை ஏற்காத நக்வி, 'நான் தான் தருவேன். இல்லை என்றால் கோப்பை கிடையாது,' என உறுதியாக நின்றார்.
இந்திய அணியினரும் கோப்பை வாங்க மறுத்து, மைதானத்தில் அமர்ந்திருந்தனர். வேறுவழியில்லாத நிலையில் நக்வி வெளியேறினார். சக பணியாளர் ஒருவர் ஆசிய கோப்பையை உடன் எடுத்துச் செல்ல, ஆசிய கோப்பை இந்திய அணிக்கு வழங்கப்படவில்லை.
வெற்றி கொண்டாட்டம்
இதன் பின் இந்திய அணியினர் கோப்பை பெற்றுக் கொள்வது போல, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 2024ல் உலக கோப்பை (டி20) வென்ற ரோகித் போல, சூர்யகுமாரும் 'ஆக் ஷன்' செய்து அசத்தினார். வாணவேடிக்கைகள் ஒளிர்ந்தன. பின் 'ஏஐ' தொழில்நுட்ப உதவியுடன் இந்திய வீரர்கள் கோப்பையுடன் இருப்பது போல, போட்டோக்கள் வெளியாகின.
பார்த்தது இல்லை
இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியது:
கிரிக்கெட் விளையாடத் துவங்கிய முதல், வெற்றி பெற்ற ஒரு அணிக்கு கோப்பை தர மறுத்தது போன்ற நிகழ்வை, இதற்கு முன் ஒருபோதும் பார்த்தது இல்லை. இதற்காக கடினமாக போராடியுள்ளோம். சாம்பியன் கோப்பை அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை.
கடந்த செப். 4ல் முதல் விளையாடி வருகிறோம். அடுத்தடுத்து இரு போட்டியில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். கோப்பை பெறுவதற்கு நாங்கள் தகுதியானவர்கள். இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை.
மற்றபடி, தொடர் முடிந்ததும் சாம்பியன்கள் தான் நினைவில் வைக்கப்படுவர். சக வீரர்கள் 14 பேர், பயிற்சியாளர்கள் என அனைவரும் தான் எனது உண்மையான கோப்பைகள். அழகான இந்த தருணங்களின், நினைவுகளை மட்டும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
களத்தில் 'ஆப்பரேஷன் சிந்துார்'
பிரதமர் மோடி வெளியிட்ட பாராட்டு செய்தியில்,'கிரிக்கெட் மைதானத்தில் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடந்துள்ளது. முடிவில் எப்போதும் போல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. நமது வீரர்களுக்கு வாழ்த்துகள்,' என தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் கூறுகையில்,'' தேசத்தின் தலைவர் இதுபோல முன்னாள் நிற்கும் போது, நீங்கள் நிம்மதியாக உணர்வீர்கள், எவ்வித நெருக்கடியும் இன்றி, சுதந்திரமாக விளையாடுவீர்கள். இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர். இந்தியாவுக்கு திரும்பும் போது, இது இன்னும் சிறப்பாக இருக்கும்,'' என்றார்.
வந்தே மாதரம்...
பைனல் நாயகன் திலக் வர்மா கூறுகையில்,'' எதிரணியினர் பல்வேறு விஷயங்களை பேசினர். எனது பேட்டினால் பதிலடி தர விரும்பினேன். தற்போது மைதானத்தில் அவர்களை காணவில்லை. ரசிகர்களின் வந்தே மாதரம்... என்ற உச்சரிப்பு எனது உற்சாகத்தை அதிகப்படுத்தியது,'' என்றார்.
ரூ. 28 லட்சம்
சூர்யகுமார் 35, கூறுகையில்,'' ஆசிய கோப்பை தொடரில் எனக்கு கிடைத்த சம்பளம் (ரூ. 28 லட்சம்) முழுவதையும் நமது ராணுவத்திற்கும், பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்குகிறேன்,'' என்றார்.
பத்திரிகையாளருக்கு பதிலடி
எதிரணி பத்திரிகையாளர் ஒருவர், சூர்யகுமாரிடம்,' நக்வியிடம் இருந்து எங்கள் அணி கோப்பை வாங்காது என இந்திய கிரிக்கெட் போர்டு, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு 'மெயில்' அனுப்பியது தெரியுமா,' என கேட்டார்.
இதற்கு சூர்யகுமார்,' நீங்கள் எந்த 'மெயில்' குறித்து சொல்கிறீர்கள் என எனக்குத் தெரியாது. இது மைதானத்தில் எடுக்கப்பட்ட முடிவு. யாரும் எங்களுக்கு சொல்லவில்லை. நீங்கள் தொடரில் வெற்றி பெற்று விட்டீர்கள், உங்களுக்கு கோப்பை கொடுத்தாக வேண்டுமா, இல்லையா, பதில் சொல்லுங்கள்.
எங்களைப் பொறுத்தவரையில் ரிங்கு சிங் பவுண்டரி அடித்தார். இந்தியா ஆசியா கோப்பை வென்றது. நாங்கள் கொண்டாடினோம். திலக், குல்தீப், கார் வென்ற அபிஷேக் சாதனைகளை பாராட்டினோம். இதைவிட உங்களுக்கு என்ன வேண்டும்,'' என, பதிலடி கொடுத்தார்.
ரூ. 21 கோடி பரிசு
ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு, பி.சி.சி.ஐ., ரூ. 21 கோடி பரிசு அறிவித்துள்ளது.
பி.சி.சி.ஐ., எதிர்ப்பு
பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைகியா கூறுகையில்,'' எங்களுக்கு எதிராக போர் நடத்திய நாட்டை சேர்ந்த ஒருவரிடம் இருந்து எப்படி கோப்பை பெற்றுக் கொள்ள முடியும். கோப்பையை அவர் எப்படி ஓட்டலுக்கு எடுத்துச் செல்ல முடியும். இது சிறுபிள்ளைத் தனமானது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எதிர்ப்பை தெரிவிக்க உள்ளோம்,'' என்றார்.
மேலும்
-
பாக்கம் மீன் விற்பனை நிலையம் பயன்பாட்டிற்கு வருமா?
-
காஞ்சியில் செயல்படும் மின்வாரிய அலுவலகம் செங்கைக்கு மாற்ற விவசாயிகள் எதிர்பார்ப்பு
-
மண் லாரிகளால் மருதேரி சாலை சேதம் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை
-
பஸ் முனைய இருப்பறையில் தீ கிளாம்பாக்கத்தில் பரபரப்பு
-
திருமணம் செய்வதாக பெண்களிடம் மோசடி திருநெல்வேலி இன்ஜினியருக்கு 'மாவுக்கட்டு'
-
காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை