அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் தாராளம் ப.வேலுார் டவுன் பஞ்., நிர்வாகம் அலட்சியம்


ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்., பகுதியில் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. நடவடிக்கை எடுக்க வேண்டிய பஞ்., நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் பழைய பைபாஸ் சாலை, சிவா தியேட்டர் கார்னர்,


நான்கு ரோடு, சுல்தான்பேட்டையில் முக்கோண பூங்கா, மோகனுார் சாலை, பொத்தனுார் டவுன் பஞ்., பகுதிகளில் அனுமதியற்ற பிளக்ஸ் பேனர்கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறடிக்கப்படுகிறது. சிவா தியேட்டர் கார்னரில் டாஸ்மாக் கடை உள்ளதால், இரவில் மது வாங்கிக்கொண்டு, பிளக்ஸ் பேனர் மறைவில் அமர்ந்து சரக்கு அடிக்க, 'குடி'மகன்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது.


அதேபோல், ப.வேலுார் சுல்தான்பேட்டை, மோகனுார் ரோடு செல்லும் பிரிவு சாலை, மூன்று ரோடு சந்திப்பு சாலையாக உள்ளது. இப்பகுதியில் ஒரே இடத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைத்துள்ளதால், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள், சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில், பலமுறை டவுன் பஞ்., நிர்வாகம் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து, ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சண்முகம் கூறியதாவது: அனுமதியின்றி, பொதுமக்களுக்கு இடையூறாக பிளக்ஸ் போர்டுகளை வைக்காதீர்கள் என பலமுறை அறிவித்தோம். சில நாட்களுக்கு முன், ப.வேலுார் பகுதிகளில் அனுமதியற்ற பிளக்ஸ் போர்டுகளை, துாய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பிளக்ஸ் போர்டுகளை வைப்பது தொடர் நிகழ்வாக உள்ளது. போலீசில் என்.ஓ.சி., வாங்கி வந்தால் மட்டுமே, டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில் பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதி தரப்படுகிறது. போலீசார், அனுமதியற்ற பிளக்ஸ் போர்டுகளை அச்சடிக்கும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். வரும் நாட்களில், உரிய வழிகாட்டுதல் படி பிளக்ஸ் போர்டு வைக்க அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement