கதறும் கரியாலுார் போலீசார் முடியல...

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை பகுதியில், கரியாலுாரில் சட்டம், ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன் உள்ளது.

கரியாலுார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நடைபெறும் வாகன விபத்து, அடிதடி, தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை, கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கைது செய்வர்.

வழக்கிற்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து, குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபரை மருத்துவ பரிசோதனைக்காக கரியாலுாரில் இருந்து 46 கி.மீ., தொலைவில் உள்ள சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது வழக்கம்.

அங்கு டாக்டரிடம் மருத்துவ தகுதி சான்று (மெடிக்கல் பிட்னஸ்) பெற்றதும், சங்கராபுரத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்து செல்வர்.

கடந்த சில தினங்களுக்கு முன், கல்வராயன்மலை பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக அதே பகுதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் புதிதாக துவங்கப்பட்டது.

இதனால் கரியாலுார் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.

அதாவது குற்ற செயலில் ஈடுபட்ட நபரை மருத்துவ பரிசோதனைக்காக 46 கி.மீ., தொலைவில் உள்ள சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். அங்கு, 'மெடிக்கல் பிட்னஸ்' சான்று பெற்று மீண்டும் 46 கி.மீ., துாரம் பயணித்து கல்வராயன்மலையில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று, ஆஜர்படுத்த வேண்டும்.

அங்கு சிறையில் அடைக்க நீதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு, 41 கி.மீ., தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

இதனால், கரியாலுார் போலீசார் கூடுதலாக 2 முறை கல்வராயன்மலையை ஏறி, இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கல்வராயன்மலை அல்லது கரியாலுார் பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement