கரூர் துயர சம்பவ வழக்கில் முன்ஜாமின் வேண்டும்: தவெக ஆனந்த், நிர்மல்குமார் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

12

மதுரை: கரூரில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

செப்.27ம் தேதி கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசார பயணம் விபரீதத்தில் முடிந்தது. விஜய்யை காண ஆர்வத்துடன் காத்திருந்தவர்களில் 41 பேர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு ஒருநபர் ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் முதல் குற்றவாளியாக மதியழகன் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கடந்த 2 நாட்களாக அவர்களை தீவிரமாக தேடிய போலீசார், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மதியழகனை நேற்று கைது செய்தனர். அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கரூர் தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் என்பவரை இன்று (செப்.30) காலை கைது செய்தனர்.

இந் நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் அவர்கள் இருவரும் முன் ஜாமின் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் இன்று மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.

மனுவில் ஆனந்த் கூறி உள்ளதாவது;

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் எங்கள் மீது எந்த தவறும் இல்லை. காவல்துறையினர் தங்கள் கடமையை செய்ய தவறிவிட்டனர். அரசு எந்திரங்கள் தங்கள் தோல்வியை மறைக்க எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

விஜய் பிரசாரம் செய்ய சரியான இடம் ஒதுக்கித் தரவில்லை. இந்த வழக்கில் காவல்துறை கைது செய்யக்கூடும் என்பதால் தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.

இவர்களின் முன்ஜாமின் மனுக்கள் வரும் வெள்ளிக்கிழமை (அக்.3) விசாரணைக்கு வருகிறது.

Advertisement